மக்கள் மனம் கவர்ந்த மழலைக் குரல் பாடகி!

M.S. Rajeswari
M.S. Rajeswari
Published on

ன்று முன்னேறிவிட்ட அறிவியல் சாதனங்கள் கலைத்துறையில் பல முன்னேற்றம் கண்டு வருகிறது. ஒரிஜினல் குரலை சிறு குழந்தை குரல் போல மாற்றித் தருகிறது தொழில்நுட்பம். ஆனால் உண்மையான குழந்தைக் குரலில் பாடி அசத்திய ஒரே பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி. இன்றும் பள்ளிகளில் குழந்தைகளின் நடனப் பின்னணியில் ஒலிக்கும் பல பாடல்கள் இவரின் குரல் என்பது சிறப்பு.

கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் ஆதரவற்ற குழந்தை நிலையில் கமலுக்காக இவர் பாடும் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலை கேட்டு இன்றும் பலரும் மனம் உருகுவார்கள். குழந்தை நட்சத்திரமாக நடித்த கமலின் சொந்தக்குரல் என்றே அனைவரும் எண்ணினர்.

சுமார் 500 பாடல்களுக்கும் மேலாகப் பாடியுள்ள ராஜேஸ்வரி 1947ல் தமது திரையுலக வாழ்வை ஏவிஎம் நிறுவனத்தின் ‘நாம் இருவர்’ திரைப்படத்தில் துவங்கினார். அவர் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். அன்று பிரபலமான திரை பின்னணிப் பாடகர்களுடன் இணைந்து இவர் பாடிய பல பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

காரணம் இவரது கொஞ்சும் தனித்துவமிக்க குரல் வளம். சுதந்திர போராட்டப் பாடல் முதல் இளம் வயது ஏக்கங்கள் வரை இவரது மழலைக் குரல் பொருந்தியது யாருக்கும் இல்லாத தனிச்சிறப்பு எனலாம். உதாரணமாக, ‘ரசிக்கும் சீமானே வா, மகான் காந்தி மகான், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...’ போன்ற பாடல்களை சொல்லலாம். 'நாம் இருவர்' திரைப்படத்தில் இவர் பாடிய 'காந்தி மகான்' மற்றும் இன்னொரு பாடலும் பாட, அந்தப் பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது.

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தைப் பாடல் பாடியதைத் தொடர்ந்து, இவரை குழந்தைகளுக்கான பாடல் என்றாலே அது எம்.எஸ்.ராஜேஸ்வரிக்குத்தான் என்ற அளவுக்கு பெயர் பெற்றார். அப்படி இவர் பாடி பிரபலமான 'சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்...' பாடல், 'பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா...' பாடல், 'மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி' போன்ற பல பாடல்கள் காலம் மாறினாலும். இன்றும் பலரும் விரும்பிக் கேட்கும் பாடல்கள் வரிசையில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
பணியாளரைத் தாக்கிய கோட் பட நாயகி... வழக்கை விசாரிக்க உத்தரவு!
M.S. Rajeswari

மழலைப் பாடல் மட்டுமல்ல, ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’ எனும் சோகப்பாடல் முதல் 1990க்கு மேல் வந்த ’துர்கா’ படத்தில் பேபி ஷாம்லிக்காக அட்டகாசமான பின்னணிக் குரல் வரை, வாழும் வரை பெரிய சாதனைக்கு சொந்தக்காரராக விளங்கியவர் ராஜேஸ்வரி.

1950களில் பிரபல கதாநாயகிகள் பலருக்கும் பின்னணி பாடல்களைப் பாடி 1970களின் இறுதிவரை புகழ் பெற்றிருந்த அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமைந்தது 1989ல் மணிரத்னம் இயக்கிய 'நாயகன்' படத்தில் இளையராஜா இசையில் ஜமுனா ராணியுடன் இணைந்து பாடிய 'நான் சிரித்தால் தீபாவளி' எனும் பிரபலமான பாடல். அதன் பின் பல பாடல்களைப் பாடி வயதானபோதும் குரலுக்கு வயதாகவில்லை என்பதை நிரூபித்தார். 1932ல் மயிலாப்பூரில் பிறந்த இவர் தனது 87வது வயதில் உடல் நலக்குறைவால் மறைந்தார்.

இவர் இல்லை என்றாலும் தனது கவரும் குரலால் இன்றும் நம்மிடையே வாழ்கிறார் என்பதே உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com