
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை ப்ரீத்தி ஜிந்தா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். கிரிக்கெட்டின் மீதான அதீத விருப்பத்தால், 2007 இல் ஐபிஎல் அணிகளில் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணியை வாங்கினார். 2008 முதல் இன்று வரை பஞ்சாப் அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும், தெடர்ந்து தனது அணி வீரர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார் ப்ரீத்தி. சமீபத்தில் ஷாருக்கானுடன் இவர் நடித்த ‘கல் ஹோ நா ஹோ’ என்ற படம் ரீ-ரிலீஸ் ஆனது. இது தொடர்பாக ரசிகர் ஒருவரின் கேள்விக்கு உருக்கமான பதிலைக் கொடுத்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா.
உளவியல் துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும், சினிமாவில் ஒரு நடிகையாக சாதித்து விட்டார் ப்ரீத்தி ஜிந்தா. இவர் 1998 இல் ‘தில் சே’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் உள்பட பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. கடந்த 2003 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான ‘கல் ஹோ நா ஹோ’ திரைப்படத்தில், அமன் வேடத்தில் ஷாருக்கான் மற்றும் நைனா கேத்தரின் கபூர் வேடத்தில் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் நடித்தனர்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலில் சாதனை படைத்தது. தற்போது சினிமாவில் ரீ-ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், இப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்படத்தைக் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர். படத்தின் ரீ-ரிலீஸைத் தொடர்ந்து, ரசிகர் ஒருவர், 'இப்படத்தை நான் பார்க்கும் போதெல்லாம் ஒரு குழந்தையைப் போலவே அழுகிறேன். அதுபோல் நீங்களும் அழுதீர்களா?' என சமூக வலைதளத்தில் ப்ரீத்தி ஜிந்தாவிடம் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ப்ரீத்தி, “நானும் உங்களைப் போல் இப்படத்தைப் பார்க்கும் போது அழுதேன். படத்தில் நடிக்கும் போதும் அழுதேன். எனது முதல் காதல் கூட ஒரு கார் விபத்தில் தான் இறந்தது. அதே போல் இப்படத்திலும் ஹீரோ கார் விபத்தில் இறப்பார். ஆகையால் இப்படம் என்றென்றும் என் நினைவில் நிலைத்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளைப் பார்த்து அனைத்து நடிகர்களும் அவர்களையே மறந்து இயல்பாகவே அழுதனர். அதிலும் கதாநாயகன் அமனின் மரணக் காட்சி, கேமராவிற்கு முன்புறம் இருந்தவர்கள் மற்றும் பின்புறம் இருந்தவர்கள் என அனைவரையும் அழ வைத்து விட்டது” என்று ப்ரீத்தி ஜிந்தா உருக்கமாக பதிலளித்தார்.
தனது முதல் காதல் இறந்தது பற்றி அவர் கூறியது வேறு யாரையும் அல்ல; ப்ரீத்தி ஜிந்தாவின் தந்தையைப் பற்றி தான். இவருடைய தந்தை துர்கானந்த் ஜிந்தா, இந்திய இராணுவ அதிகாரியாக பணியாற்றியவர். ப்ரீத்தி ஜிந்தாவிற்கு 13 வயது இருக்கும் போது, அவருடைய தந்தை ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தான் ரசிகரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது மறைமுகமாக தெரிவித்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா.