
சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் அறிமுகமாகும் திரைப்படத்தின் பெயரை அடைமொழியாக வைத்திருக்கிறார்கள். ‘தேங்காய்’ சீனிவாசன், ‘படாபட்’ ஜெயலட்சுமி, ‘நிழல்கள்’ ரவி, ‘யோகி’பாபு, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, ‘பசி’ நாராயணன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் சின்னத்திரை புகழ் நந்தினியும் தனது பெயருடன் அடைமொழியை சேர்த்துள்ளார்.
சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நந்தினி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நந்தினி. இந்த சீரியலில் இவர் நடித்த மைனா என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதால் அன்று முதல் ‘மைனா' நந்தினி என்றே அழைக்கப்படுகிறார். ஆரம்பத்தில் விஜேவாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய மைனா நந்தினிக்கு சரவணன் மீனாட்சி சீரியல் தான் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.
சீரியலை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் காமெடி வேடத்தில் நடித்தன் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். அதனை தொடர்ந்து ‘வம்சம்', ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா', ‘எங்க வீட்டு பிள்ளை', ‘விக்ரம்' போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். புதிய படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் 6வது சீசனிலும் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். வெள்ளித்திரைக்கு தாவிய பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும், சின்னத்திரையை விட்டு விலகி விட்டார் என்றும் தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள மைனா நந்தினி தற்போது , சீரியலில் நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு அடையாளம் தந்த சின்னத்திரையை விட்டு விலக ஒருபோதும் நினைத்தது கிடையாது. சில வருடங்களாகவே சின்னத்திரையில் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை என்பதே உண்மை. சினிமாவில் நடிப்பதால் சீரியலில் நடிக்க மாட்டேன் என்று நினைத்து விட்டார்கள் போல. இப்போது வரை சின்னத்திரையில் வாய்ப்பு கேட்டு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சின்னத்திரையில் நடிப்பேன். நான் எப்போதும் சின்னத்திரை வேண்டாம் என்று ஒதுங்கியது கிடையாது, சரியாக வாய்ப்பு வராததால்தான் நடிக்கவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, தன்னுடைய கணவரோடு சேர்ந்து யூடியூப் சேனலில் சில ஷார்ட் ஃபிலிம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு நீண்ட நாள் காதலரான கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக்கும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் திருமணமான ஆறு மாதத்திலேயே கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகேஸ்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.