
சின்னத்திரையில் பிரபலமான பல நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் ஜொலிக்கத் தொடங்கிவிட்டார்கள். பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர்கள், தற்போது திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.
சினிமாவில் நடிக்க 2000-ம் ஆண்டு வரை அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாத சூழ்நிலை இருந்தது.
சின்னத்திரை, சமூக வலைதளங்கள் போன்ற ஊடக வளர்ச்சிக்குப் பிறகு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏராளமானவர்கள் திரைத்துறையை நோக்கி படை எடுக்க ஆரம்பித்தார்கள்.
சின்னத்திரையில் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்திய கலைஞர்களை திரையுலகம் சிவப்பு கம்பளம் விரித்து வாரி அணைத்துக் கொண்டது.
அப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலிக்கும் சில நட்சத்திரங்களின் பட்டியல்:-
சிவகார்த்திகேயன்
திருச்சியில் இருந்து சினிமா கனவோடு வந்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், ரியாலிட்டி ஷோ என்று சின்னத்திரையில் பல ஆண்டுகளாக பவனி வந்தவர். அதன் பலனாக ‘மெரீனா' படத்தில் சிறிய வேடம் ஏற்றார். பின்னர் `மனம் கொத்திப்பறவை' படத்தில் கதா நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா', ‘எதிர்நீச்சல்', ‘ரஜினி முருகன்', ‘ரெமோ', ‘டாக்டர்', ‘அயலான்', ‘அமரன்' உள்பட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சந்தானம்
`லொள்ளு சபா' என்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் வழியாக இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. காமெடியால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்து மக்களை மகிழ்வித்து வருகிறார். ஒரு கட்டத்தில் இவருக்கு கதாநாயகன் வாய்ப்பு வந்தது. அதிலும் வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வருகிறார்.
யோகி பாபு
சின்னத்திரையில் காமெடியனாக தன் வாழ்க்கையை தொடர்ந்தவர். ‘யோகி' படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நகைச்சுவை நடிகராக தனது பங்களிப்பை செய்தவர்.
நாளடைவில் இவரை தேடி ஹீரோ வாய்ப்பும் வந்தது. `கூர்கா', ‘மண்டேலா', ‘பேய் மாமா', ‘பன்னிக்குட்டி', ‘குய்கோ' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
கவின்
திருச்சியைச் சேர்ந்த இவர் சினிமா கனவுடன் கலைத்துறைக்கு வந்தவர். சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர். பிறகு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார். நாளடைவில் சினிமாவில் கேரக்டர் நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்தார். ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா', ‘லிப்ட்' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த இவருக்கு ‘டாடா’ திருப்புமுனையாக அமைந்தது.
பிரியா பவானி சங்கர்
என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக சின்னத்திரையில் கொடி கட்டி பறந்தவர். அடுத்து பல தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். ‘மேயாத மான்' என்ற முதல் படத்திலேயே வெற்றியைக் கொடுத்தார். ‘கடைக்குட்டி சிங்கம்', ‘மான்ஸ்டர்', ‘யானை', ‘திருச்சிற்றம்பலம்', ‘பிளாக்' உட்பட ஏராளமான படங்களின் வெற்றி தமிழ் சினிமாவில் இவருக்கான இடத்தை உறுதி செய்ததுடன், முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.
வாணி போஜன்
சின்னத்திரையில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் போதே சினிமாவில் நுழைந்தார். ‘ஓ மை கடவுளே, ‘லவ்', ‘மிரள்', அஞ்சாமை' உள்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
பிரஜன்
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த இவர், நீ நான் காதல் என்ற தமிழ் தொடர் மற்றும் மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர். ‘டி3', ‘அக்கு', ‘நினைவெல்லாம் நீயடா' உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ரசிதா மகாலட்சுமி:
இவர் பல தமிழ் தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். ரசிதா மகாலட்சுமி தெலுங்கு சின்னத்திரையில் நடித்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார். தற்போது ஃபயர், எக்ஸ்ட்ரீம் என்ற திரைப்படங்களில் நடித்தன் மூலம் சினிமாவில் நுழைந்துள்ளார்.
வைஷ்ணவி:
பொன்னி சீரியல் மூலம் பிரபலமான வைஷ்ணவி, தற்போது திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டாராம்.
கண்மணி மனோகரன்:
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான கண்மணி மனோகரன், தற்போது திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.
இதுபோல் தர்ஷன், புகழ் என பல சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் வெள்ளித் திரையில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர்கள், தங்கள் திறமை மற்றும் கடின உழைப்பால் வெள்ளித்திரையில் ஜொலிக்கத் தொடங்கிவிட்டார்கள்.