விமர்சனம்: மையல் - மனதில் மையம் கொள்ள வில்லை!
ரேட்டிங்(2 / 5)
ஆஹா எவ்வளவு நாள் ஆச்சு இப்படி ஒரு ஹீரோயினை பார்த்து..? நேட்டிவிட்டி அழகுடன், பாவாடை தாவணியில் க்யூட்டாக இருக்கிறார் மையல் படத்தின் அறிமுக ஹீரோயின் சம்ரிதி தாரா.
எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனத்தில் APJ ஏழுமலை இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மையல்.
ஊரில் உள்ள ஆடுகளை திருடுபவர் நம் நாயகன் சேது. ஒரு இரவில் ஆட்டை திருடி செல்லும் போது ஊர் மக்களில் சிலர் சேதுவை துரத்துகிறார்கள். உடனே சேது ஊரில் ஒதுக்கு புறமாக உள்ள ஒரு மந்திரவாதி வீட்டில் அடைக்கலம் புகுகிறார்.
அங்கே மந்திரவாதி கிழவியின் பேத்தியான நம் நாயகி சம்ரிதா சேதுவுக்கு அடைக்கலம் தருகிறார். இந்த அடைக்கலம் அன்பாக மாறி காதலாக உருவெடுக்கிறது. தான் ஊருக்கு சென்று பணம் ஏற்பாடு செய்து விட்டு மீண்டும் வந்து கரம் பிடிப்பதாக சம்ரிதாவுக்கு வாக்கு தருகிறார் சேது.
இந்த சூழ்நிலையில் ஊரில் இரட்டை கொலை நடக்கிறது. இந்த கொலைகள் சேதுவின் வாழக்கையை எப்படி பாதிக்கின்றன என்பதை மையல் சொல்கிறது.
'மந்திரவாதி பெண்ணிற்கும், திருடனுக்கும் காதல்' என்ற ஒன் லைன் கதை கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் கதையை நகர்த்தி செல்லும் திரைக்கதை very weak. படம் நகரும் விதமும், காட்சியமைப்பிலும் ஒரு யதார்த்தமோ, உண்மைதன்மையோ இல்லை.
நாயகனும் நாயகியும் காதலிக்கும் காட்சிகள் மட்டும் ஒகே ரகம். "என்னை விட்டு போய்டமாட்டியே" என்று நாயகி சம்ரிதா தாரா கெஞ்சும் போது touching. காதலிக்காக உருகும் காட்சியில் ஹீரோ சேது நம் மனதை உருக்கி விடுகிறார்.
இன்ஸ்பெக்டராக நடித்தவர், மற்றும் மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணி என ஒரு சில கதாபத்திரங்கள் மட்டும் மனதில் நிற்கிறது.
ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற அம்சங்களும் மிக சாதாரணமாக இருக்கின்றன. இருந்தாலும் அமரகீத்தின் பின்னணி இசை காதல் காட்சிகளில் நன்றாக இருக்கிறது.
ஒரு நல்ல காதல் கதையை சொல்ல சரியான, சுவாரசியமான திரைக்கதையை ஜெயமோகன் அமைக்காததால் மையல் பெரிய அளவில் மனதில் மையம் கொள்ள வில்லை.