
கடந்த ஒருவாரமாகச் சமூக ஊடகங்களில் பரப்பரப்பைக் கிளப்பியவொரு படம் மிஷன் இம்பாஸிபிள் - பைனல் ரெக்கனிங். டாம் க்ரூயிஸ் மற்றும் கிறிஸ்டோபர் மேக்வாயர் கூட்டணியில் இது நான்காவது மற்றும் கடைசி படம். இந்தச் சீரிஸில் இது தான் இறுதி. ரசிகர்கள் ஆவலாக இந்தக் கூட்டணியின் நம்ப முடியாத சண்டைக் காட்சிகளில் திளைக்கக் காத்திருந்தார்கள்.
சென்ற பாகம் எங்கு முடிந்ததோ அங்குத் தொடங்குகிறது கதை. என்டிடி என்ற செயற்கை நுண்ணறிவு. இதற்கு முகமும் உடலும் கிடையாது. இது தான் உலகை இனி ஆளப்போகும் ஒரு சாகாவரம் பெற்ற சக்தி. இதைக் கட்டுக்குள் கொண்டு வந்து உலகை ஆள நினைக்கும் வில்லன் கேபிரியல். இந்தச் சக்தி யாரிடமும் சென்று விடக் கூடாது என்று தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் ஈத்தன் ஹண்ட் நினைக்கிறார். எல்லாவிதமான தொடர்பையும் துண்டித்து இருக்கிறார். அவருக்கு அமெரிக்க அதிபரிடமிருந்து ஒரு தகவல் வருகிறது. இந்த உலகத்தைக் காக்க உன்னால் மட்டும் தான் முடியும்.
என்டிடியை அளித்து நாட்டையும் உலகத்தையும் மீட்டெடுக்க ஒரு கடைசி வாய்ப்பு. யாராலும் முடியாத ஒரு மிஷன். இதற்கு மேல் உன்னையும் உன் குழுவையும் அரசு தொந்தரவு செய்யாது என்று அதில் இருக்கிறது. அதிபர் கேட்டு மறுக்க முடியுமா. கிளம்புகிறார். அவருடைய நண்பர்களான பென்ஜி (சைமன் பெக்), லூத்தர் (விங் ரேம்ஸ்), கிரேஸ் (ஹேலி ஹெட்வெல்) இணைந்து கொள்ள இந்த அணி கடைசி மிஷனை எப்படி முடித்தது என்பது தான் கதை.
கதை என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. பொதுவாக மிஷன் இம்பாஸிபிள் படங்களில் சண்டைக்காட்சிகளும் சாகசங்களுக்குமே முக்கியத்துவம் இருக்கும். கொடுத்த காசுக்கு இந்தச் சேஸ் போதும்டா என்று தான் வெளியே வருவார்கள். அதுபோலப் பத்து நிமிடங்களுக்கு ஓர் ஆக்க்ஷன் பிளாக் இருக்கும் என்று நம்பி உள்ளே வருபவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது. முதல் ஒரு மணி நேரம்வரை எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் பில்டப்பிலேயே கதை நகர்கிறது. அதனால் ஆபத்து. உலகம் அழிந்து விடும். உன்னால் மட்டும் தான் முடியும் என்று ஈத்தன் ஹண்ட்டை 'ஈத்தன் பாய்' ரேஞ்சுக்கு ஏற்றி விடுகிறார்கள். அந்த என்டிடி பற்றிய பேச்சுகளிலேயே கழியும் முதல் பாதி எந்தவிதமான சுவாரசியமும் இல்லாமல் கழிகிறது.
அவரும் இருக்கும் சாவியைக் கோர்க்கக்கூடிய ஒரு பாக்ஸை தேடி நீர்மூழ்கிக் கப்பலுக்குள் ஈத்தன் நுழையும்போது தான் படம் வேகமெடுக்க ஆரம்பிக்கிறது. சற்றே நீண்டு கொண்டே சென்றாலும் இந்தக் காட்சிகள் அபாரம். ஒளிப்பதிவு, ஆக்க்ஷன், இயக்கம், எடிட்டிங் என அனைத்தும் கைகோர்த்து இது தாண்ட உலகத்தரம் என்று சொல்ல வைக்கிறது. இதிலிருந்து நிமிர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்குள் வருகிறது ஒரு விமானத் துரத்தல். பறக்கும் விமானத்தில் தொங்கியவாறு டாம் க்ரூயிஸ் செய்யும் சாகசங்கள் வாவ். இந்த விமானத்திலிருந்து அந்த விமானத்திற்குப் போகிறார். முன் சீட்டிலிருந்து பின் சீட்டுக்கு மாறுகிறார். குதிக்கிறார். அனைத்தையும் நம்பும்படி செய்கிறார். முதல் பாதி ஏமாற்றத்திற்குப் பிற்பாதியில் வைத்துச் செய்துவிட்டார்கள் என நம்மை நினைக்க வைத்துவிடுகிறது இந்தக் குழு.
பொதுவாக இது போன்ற படங்களிலும் லாஜிக் என்பதெல்லாம் பார்க்கவே கூடாது. நாயகனின் அணி செல்லும் இடங்களில் எல்லாம் யாருமே இருக்க மாட்டார்கள். வில்லன் கும்பல் சரியாகச் சுற்றி வளைக்கும். ஆர்க்டிக் பகுதியில் இருக்கும் ஓர் எஞ்சினியரும் அவர் மனைவியும் மட்டுமே சேர்ந்து ஒரு மாபெரும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை உருவாக்கி இருப்பார்கள். வெடிகுண்டை கடைசி நொடியில் தான் செயலிழக்கச் செய்வார்கள். ஆனால் நாமும் கைதட்டிப் பார்ப்போம். இதுவும் விதிவிலக்கல்ல.
மற்ற பாகங்கள் பார்க்காமல் இந்தப்படம் பார்க்கலாமா என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை. முதல் பாகத்திலிருந்து கடைசி பாகம்வரை நடந்த காட்சிகளைத் தொடர்பு படுத்தி சில பல காட்சிகள் வைத்துள்ளனர். முதல் பாகத்தில் வந்த ஒரு பாத்திரம் இதில் வந்து ஒரு முக்கியமான விஷயத்தில் உதவி செய்வது போல் எழுதியதில் இயக்குநரின் சாமர்த்தியம் தெரிகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் கற்பனை வறட்சியும் அதில் தெரிகிறது. அதிகமாக ஆக்க்ஷன் காட்சிகள் வைக்காமல் பேச்சிலேயே செல்வதால் படம் மந்தமாக நகர்கிறது. இதுவரை வந்த படங்களிலேயே இந்தப் பெயரைப் பெற்ற ஒரே படம் இது தான்.
டாம் க்ரூயிஸ். அறுபத்து இரண்டு வயதில் பிட்டாக இருக்கிறார். ஓடு ஓடென்று ஓடுகிறார். உள்ளாடையுடன் பனிக்கடலுக்குள் குதிக்கிறார். வயதுக்கு மீறிய சாகசமாக விமானத்தில் தொங்குகிறார். ஆனாலும் ரசிக்கும்படி நடிக்கிறார். சில பாத்திரங்களுக்கிடையே நிகழும் பார்வைப் பரிமாற்றங்கள் மிகவும் சுவாரசியம். புன்னகையுடன் நம்மையறியாமல் ரசிக்கிறோம். நீர்மூழ்கிக்கப்பல் காட்சிகளை எல்லாம் எப்படி எழுதியிருப்பார்கள் என்ற வியப்பும் எழுகிறது. ரசிகர்களின் உணர்ச்சிகளைத் தொட வேண்டும் என்று ஒரு பாத்திரம் செத்துப் போகிறது. இருவர் சாவின் விளிம்பிலிருந்து பிழைக்கின்றனர்.
இந்தக் கூட்டணியையே ஆட்டிப் படைக்கும் வில்லன் பெரும்பாலான காட்சிகளில் காணாமல் போகிறார். தமிழ்ப்பட போலீஸ் போலக் கடைசியில் என்ட்ரி கொடுத்துப் படத்தை முடித்து வைக்கச் செத்துப் போகிறார். உருவமில்லாத அந்த என்டிடிக்காக எதற்கு முக்கிய அரசு அதிகாரிகள் வில்லன்களாக மாறுகிறார்கள். அதில் அவர்களுக்கு என்ன லாபம் என்பதெல்லாம் புரியவே இல்லை.
இந்த மிஷன் இம்பாஸிபிள் சீரியசில் வீச்சு குறைவு பேச்சு அதிகம் என்றால் முதல் பாகத்தைச் சொல்லலாம். அதற்கு அடுத்த இடத்தை இந்தக் கடைசி பாகம் பெறுகிறது. ஒரு முக்கியமான சண்டைக்காட்சியைக் கூட அதைப் பார்ப்பவரின் பார்வையிலும் உடல்மொழியில் கடந்து செல்வது தான் கொடுமை. உண்மையில் இது தான் கடைசி என்பதெல்லாம் இவர்கள் ஏற்றி விடுவதற்காகச் சொன்னது போல் தான் தெரிகிறது. படத்தின் கடைசிக் காட்சியில் முற்றிலும் புதிய ஓர் அணி ஒன்று உருவாகி பை சொல்லிச் செல்கிறது. யார் கண்டது நான்கைந்து ஆண்டுகள் கழித்து வேறொரு உருவத்தில் இந்த ஐ எம் எப் அணி திரையில் இணையலாம். நமக்கு என்ன ஞாபகம் வரவா போகிறது அல்லது இவர்கள் தான் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்களா.
செகண்ட் ஆப் ஓகே என்று சொல்லிக்கொள்ளும் அதே நேரத்தில் இதுக்காடா இவ்வளவு பில்டப் பண்ணீங்க என்ற கேள்வியும் மனதிற்குள் எழாமல் இல்லை.