
நாகார்ஜுனாவின் வீட்டில் அடுத்த கல்யாணம் ஆரம்பம்: நாக சைதன்யா தம்பிக்கு நிச்சயதார்த்தம்!
தெலுங்கு, தமிழ் பட உலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா. தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த அமலாவைக் காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் பிறந்தவர்தான் நடிகர் நாக சைதன்யா. இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சமந்தாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா சில வருடங்களிலேயே கருந்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அடுத்து நடிகை சோபிதா துலிபலாவை டிசம்பர் 4ம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார் நாக சைதன்யா.
இதனிடையே, நாகார்ஜுனா - அமலா தம்பதியினரின் ஒரே மகனான நடிகர் அகில் அக்கினேனி தெலுங்கில் நடித்து வெளியாகும் படங்கள் எல்லாம் பெரிதாக ஓடாத நிலையில், திருமணம் செய்து செட்டில் ஆகப் போகிறாரா என்று கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இவரின் ஏஜெண்ட் திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிதாக ஓடவில்லை.
30 வயதான அகில் அக்கினேனிக்கு தான் காதலித்து வந்த மும்பையை சேர்ந்த ஜைனாப் ரவ்ட்ஜியுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “எங்கள் மகன் அகில் நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது மருமகளாக வரப் போகிறவர் ஜைனாப் ரவ்ட்ஜி. ஜைனாபை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த இளம் தம்பதியரை வாழ்த்த எங்களுடன் இணையுங்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி, மற்றும் உங்களது எண்ணற்ற ஆசீர்வாதத்துடன் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அகில் அக்கினேனி நிச்சயதார்த்தத்தை நாகார்ஜுனா அறிவித்துள்ள நிலையில், அகில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் நாகார்ஜுனாவின் வீட்டில் ஒரே கல்யாண கலாட்டா தான் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
அகில் அக்கினேனி காதலி ஜைனப் ஒரு இஸ்லாமிய பெண். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரின் மகள். ஓவியக் கலைஞரான ஜைனப் ரவ்ஜீயும் அகிலும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இவர்களுடைய காதல் குடும்பத்திற்கு தெரிய வந்ததும் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இவர்களுடைய திருமணம் அடுத்த ஆண்டு பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறதாம்.
இதற்கு முன், அகில் அக்கினேனிக்கும் தொழிலதிபரான ஜி.வி.கிருஷ்ணா ரெட்டியின் பேத்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததும் இந்த திருமணம் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், திடீரென நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.