விமர்சனம் - நண்பன் ஒருவன் வந்த பிறகு 'NOVP' - யதார்த்தம் பேசுகிறது!
ரேட்டிங்(3.5 / 5)
'வெள்ளித்திரை எங்கும் காதலடா' என்று காதலை கொண்டாடிய தமிழ் சினிமாக்கள் முன்பு நிறைய வந்து கொண்டிருந்தன. ஆனால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை போல சுய ஜாதி பெருமை பேசும் படங்கள் இப்போது அதிகரித்து விட்டன. வெள்ளித்திரையில் மீண்டும் காதல் மலராதா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு ஆதரவாக வந்துள்ளது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு ' திரைப்படம்.
இந்த படத்தை சுருக்கமாக NOVP என்கிறார்கள் படக்குழுவினர். படத்தை ஆனந்த் இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இவரது கேரக்டர் பெயரும் ஆனந்த் தான். இப்படத்தை ஐஸ்வர்யா மற்றும் சுதா இணைந்து தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் மீது நம்பிக்கை கொண்ட வெங்கட் பிரபு, தானே இப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.
வெங்கட் பிரபுவின் நம்பிக்கையை காப்பாற்றி விட்டார் டைரக்டர் என்றுதான் சொல்ல வேண்டும். சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் சென்னை வரும் ஆனந்த், தனது சக பயணியான டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் தன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதாக கதை தொடங்குகிறது.
படித்து விட்டு வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார் ஆனந்த். இருந்தாலும் பல்வேறு வேலைக்கு சென்று முயற்சிக்கிறார். எந்த வேலையும் சரியாக அமையவில்லை. பணம் இல்லாமல் நண்பர்கள் சிலரால் அவமானப்படுத்த படுகிறார். கண்ணம்மா என்ற பெண்ணை காதலிக்கிறார். பணம் செலவழித்து சிங்கப்பூர் செல்கிறார். அங்கே வேலை செய்து, வீட்டிற்கு பணம் அனுப்பி அடமானத்தில் இருக்கும் வீட்டை மீட்கிறார். ஊரில் இருக்கும் நண்பர்களின் நினைவு அடிக்கடி வந்து போகிறது.
சென்னையிலிருக்கும் காதலி கண்ணம்மாவிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிறது என்ற தகவல் வருகிறது. பணியில் வரும் வளர்ச்சியை புறக்கணித்து விட்டு சென்னை புறப்பட்டு வருகிறார் ஆனந்த்.
இங்கே வந்து நண்பர்களை சந்தித்தாரா? காதல் என்ன ஆனது என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் திரைக்கதையில் உள்ளது. நட்பு, காதல், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத சூழ்நிலை என்ற மூன்று விஷயங்களையும் எமோஷன் என்ற ஒற்றை நேர்கோட்டில் ஒன்று சேர்த்திருக்கிறார் டைரக்டர் ஆனந்த். படத்தின் பல இடங்களில் எமோஷனலாக நம்மை கனக்ட் செய்து கொள்ள முடிகிறது.
வீட்டு மொட்டை மாடியில் நண்பர்கள் ஒன்று சேர்ந்து பார்ட்டிக்காக பணம் வசூல் செய்யும் போது ஹீரோ அவமானப்படுத்தபடும் காட்சியும் அதன் தொடர்ச்சியாக நண்பர்கள் நடுவில் ஏற்படும் சிறு மோதலும் நன்றாக காட்சிப்படுத்தபட்டுள்ளன. "பசங்க மாதிரி பொண்ணுங்க நாங்க வெயிட் பண்ண முடியாது. இப்ப ஆரம்பிச்சா கூட இரண்டு வருஷத்தில் கல்யாணத்தை முடிச்ருவாங்க. சீக்கிரம் வேலைல செட்டில் ஆகு. அப்பதான் நாம கல்யாணத்தை பற்றி பேச முடியும்" என்று ஹீரோயின் ஹீரோவிடம் சொல்வது இன்றைய யதார்த்த காதலை சொல்வது போல உள்ளது.
நடுத்தர குடும்பத்தில் உள்ள ஒரு படித்த இளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்களை தனது உணர்வுகளின் மூலம் நன்றாக தந்துள்ளார் ஆனந்த். காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகி விட்டது என்று தெரிந்தவுடன் அடையும் வேதனைகளை நன்றாக வெளிப்படுத்தி உள்ளார். ஒரு சராசரி தமிழ் பெண்ணின் பிரதிபலிப்பாக இருக்கிறார் பவானி ஸ்ரீ.
'அப்பா கேரக்டரா கூப்பிடு குமாரவேலை' என்பது போல் இப்போது பல படங்களில் அப்பா கேரக்டரில் நடிக்கிறார் இளங்கோ குமரவேல். என்ன கஷ்டம் வந்தாலும் தன் மகன்களுக்கு தெரிய கூடாது, நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என நினைக்கும் பல்வேறு அப்பாக்களை நடிப்பில் கண் முன் கொண்டு வருகிறார் இவர்.
நட்பு என்பது கொண்டாட்டத்திற்கு மட்டுமல்ல. தோள் கொடுக்கவும்தான் என்கிறது இப்படம். காதல் என்பது ஈர்ப்பு மட்டுமல்ல. பரஸ்பர புரிதல், திட்டமிடல், நான் உனக்காக காத்திருக்கிறேன் என்று புரிய வைப்பதும்தான் என்கிறது NOVP.
காசிப்பின் இசையில் காதல் மனதை வருடுகிறது. காதலையும், நட்பையும் எந்த வித பூச்சுகளும் இன்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நண்பன் ஒருவன் வந்த பிறகு NOVP படத்தை பாருங்கள்.