Jama Movie Review
Jama Movie Review

விமர்சனம் 'ஜமா' - ஜமாய்த்து விட்டார்கள் கலைஞர்கள்!

Published on
ரேட்டிங்(4 / 5)

தமிழ்நாட்டில் எந்த தியேட்டருக்கு போய் என்ன படம் பார்த்தாலும் வெட்டு குத்து, அரிவாள், பழிக்கு பழி என வெள்ளித்திரை எங்கும் ரத்தாபிஷேகமாக இருக்கிறதே என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஆறுதலாகவும், ஒரு நம்பிக்கை வெளிச்சமாகவும் வந்துள்ளது ஜமா திரைப்படம். லேர்ன் அண்ட் டெக் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. மண் சார்ந்த கலை தெருக்கூத்து. இக்கலையை  மையப்படுத்தி வந்துள்ளது ஜமா. (திருவண்ணாமலை மாவட்டத்தில் தெருக்கூத்து குழுவை ஜமா என்ற பெயரில் அழைக்கிறார்கள்.) பாரி இளவழகன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சில தெருக்கூத்து கலைஞர்களும் நடித்துள்ளார்கள். இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.    

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பட்டு கிராமத்தில் வசிக்கும் நம்ம ஹீரோ கல்யாணத்தின் (பாரி இளவழகன் ) தந்தைக்கு கூத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை. ஒரு ஜமாவில் சேர்ந்து கூத்தை கற்று கொள்கிறார். உடன்  தாண்டவனும்  (சேத்தன்) சேர்ந்து கொள்கிறார். இருவரும் சேர்ந்து புதிய ஜமா ( தெருக்கூத்து குழு ) ஒன்றை ஆரம்பிக்கிறார்கள். நயவஞ்சகமாக தாண்டவன் கல்யாணத்தின்  தந்தையை ஒதுக்கி வைத்து விட்டு  ஜமாவை கைப்பற்றி கூத்து வாத்தியார் ஆகி விடுகிறார். இதனால் மனமுடைந்த கல்யாணத்தின்  அப்பா இறந்து விடுகிறார். கல்யாணம், சேத்தனின் ஜமாவில் சேர்ந்து மகாபாரத கூத்தில் திரௌபதி வேஷம் கட்டுகிறார் (நடிக்கிறார்) . 

தொடர்ந்து திரௌபதி வேஷம் கட்டுவதால் கல்யாணத்தின் நடை, உடை, பாவனையில் ஒரு பெண் தன்மை ஏற்பட்டு விடுகிறது. இதனால் இவரை ஊர் கேலி செய்கிறது. எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. தான் கூத்தில் திரௌபதி வேஷம் கட்டுவதுதான் இதற்கு காரணம் என நினைக்கும் கல்யாணம், இதை மாற்ற கூத்தில் அர்ஜுனன் வேஷம்  கட்ட நினைக்கிறார். தன் விருப்பத்தை வாத்தியார் தாண்டவத்திடம் கோரிக்கையாக வைக்க, தாண்டவம், பாரியை அவமானப்படுத்தி அனுப்புகிறார். கல்யாணம்  அர்ஜுனன் வேஷம் கட்ட எடுக்கும் முயற்சிகள்தான் இந்த ஜமா படம்.

இதையும் படியுங்கள்:
Raayan Review - 'ராயன்' - ரத்த உறவுகளின் குருதியாட்டம்!
Jama Movie Review

தொடங்கிய இரண்டாவது காட்சியிலிருந்து இறுதி வரை பார்வையாளர்களை கட்டிபோட வைத்து விடுகிறார் டைரக்டர். படம் முழுவதும் நாம் கதை நடக்கும் பள்ளிகொண்டா பட்டு  கிராமத்தில் இருப்பதை போன்ற உணர்வு வருகிறது. கூத்தில் அர்ஜுனன் வேஷம் போட போராடும் நாயகன் என்ற ஒற்றை விஷயத்தை மட்டுமே நோக்கி திரைக்கதை நகர்வது கூடுதல் சிறப்பு.

படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான பாரி இளவழகன் இதற்கு முன் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர். ஜமா படத்தில் ஜமாய்த்து விட்டார். பெண் பார்க்க போகும் போது, ஏற்படும் அவமானங்களை கூட நகைச்சுவையாக மாற்றும் காட்சி, அர்ஜுனன் வேடத்திற்காக தனது ஆசானையே எதிர்க்கும் காட்சி என பல காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.  விக்ரம், விஜய் சேதுபதி வரிசையில் இன்னொரு ஹீரோ கிடைத்து விட்டார் என்று உறுதியாக சொல்லலாம்.

இந்த படத்தில் சேத்தனின் நடிப்பை பார்த்தால் தமிழ் சினிமா இதுவரை இவரை முழுமையாக  பயன் படுத்தவில்லை என்று சொல்வீர்கள். தன் சீடன் தன்னை தாண்டி போய் விடக்கூடாது என்பதில் கவனமாகவும், ஆணவம் பிடித்த கூத்து வாத்தியாராகவும் நன்றாக நடித்துள்ளார். கூத்தில் கர்ணனாக நடிக்கும் போது ஒரு இடத்தில் மூடிய கண்ணை திறந்து ஒரு சொட்டு கண்ணீர் விடுவார். இந்த இடத்தில்  சபாஷ்  சேத்தன் என்று சொல்ல வைக்கிறார். பாரியின் பெற்றோராக நடிப்பவர்கள், அம்மு அபிராமி என அனைவருமே தன் பங்களிப்பை   சரியாக செய்துள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:
'சட்னி சாம்பார்'... யோகி பாபு - ராதாமோகன் நகைச்சுவைச் சிற்றுண்டி!
Jama Movie Review

இது போன்ற மண் சார்ந்த கதைகளுக்கு இளையராஜாவை தவிர வேறு யாராலும் சிறந்த இசையை தர முடியாது என்று உணர்ந்த டைரக்டர் இளையராஜாவை இசை அமைக்க வைத்துள்ளார்.  கூத்தில்,  குருஷேத்திர போரின் பதினேழாம் நாளில் கர்ணன் இறந்து கிடைக்க, குந்தி அழுது ஒப்பாரி வைப்பார். ஒப்பாரி முடிந்த பின்  பின்ணனியில் எந்த வித இசையும் இருக்காது. சில நிமிட அமைதிக்கு பின் மெதுவாக இசை ஒலிக்கும். "என் படத்தில் ஒரு சில இடங்கள் மௌனமாக கடந்து போகும். என் படத்தின் மௌனத்தை புரிந்து இசையமைப்பவர் இளையராஜா" என ஒரு முறை பாலுமகேந்திரா சொல்லியிருந்தார். இந்த காட்சி அவர் சொன்னதை நினைவு படுத்துகிறது. ரீ - ரெக்கார்டிங்கில் ராஜா ஒரு ராஜாங்கத்தையே நடத்தி விட்டார்.  

ஆபாசம், வன்முறை எதுவும் இல்லாமல் தெரு கூத்து கலைஞர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக வந்துள்ளது ஜமா. நல்ல சினிமா வரவில்லையே என ஆதங்கப்படும் நாம் இது போன்ற நல்ல படங்களை ஆதரிக்கவும்  வேண்டும். ஜமா - உலக தரத்தில் ஒரு தமிழ் சினிமா. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. அவசியம் பார்க்க வேண்டிய படம்.

logo
Kalki Online
kalkionline.com