ஹிட் 3 படத்தில் நடித்த கோமலி பிரசாத் அப்படத்தில் நடித்தது குறித்தும், நானி குறித்தும், தமிழ் படங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.
சயிலேஷ் கொலானு இயக்கியுள்ள 'ஹிட் 3' திரைப்படம், 'ஹிட்' திரைப்பட வரிசையில் மூன்றாவது பாகமாக மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த அதிரடி திரில்லர் திரைப்படம், பார்வையாளர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திறமையான காவல் அதிகாரியான அர்ஜுன் சர்க்கார், தொடர் கொலைகளைத் துப்பறியும் பணியில் ஈடுபடுகிறார். இந்த வழக்கின் மர்ம முடிச்சுகளை அவர் எவ்வாறு அவிழ்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நானியின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், படத்தின் திரைக்கதை சில விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, மிக்கி ஜே. மேயர் இசையமைத்துள்ளார். விறுவிறுப்பான பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
ஹிட் 3', முந்தைய பாகங்களைப் போல இல்லாவிட்டாலும், நானியின் அசத்தலான நடிப்புக்காகவும், சில விறுவிறுப்பான காட்சிகளுக்காகவும் பார்க்கலாம்.
'ஹிட் 3' திரைப்படத்தில் கோமலி பிரசாத்தின் நடிப்பு குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது கதாபாத்திரம் படத்திற்கு மேலும் ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தை அளித்துள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அவர் படம்குறித்து பேசும்போது, “இந்த வரவேற்பு கண்கலங்க வைத்துவிட்டது. இதுபோன்ற கதாபாத்திரங்களையே இனி தேர்வு செய்து நடிப்பேன். நானியுடன் நடித்ததை மறக்க முடியாது. அவர் ஒரு திறந்த புத்தகம். அவர் நடிகர் மட்டுமல்ல. எல்லாத் துறைகள் பற்றியும் அவருக்குத் தெரியும். சில ஆக்ஷன் மூவ்ஸூம் எனக்கு சொல்லித் தந்தார். பெரிய இன்ஸ்பிரேஷன்.
என்னுடைய ரிங் டோனே, ‘நானும் ரெளடிதான்’ படத்தில் இருந்து ‘நீயும் நானும்…’ பாடல்தான். தமிழ் மொழி மீதுள்ள காதலால் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டேன். ஆக்டிங் டிரைனர் சூரி எனக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்து அதில் இருந்து தமிழ் கற்றுக் கொடுத்தார். இயக்குநர்கள் சி. பிரேம்குமார், அல்ஃபோன்ஸ் புத்திரன், மணிகண்டன் மற்றும் GVM படங்களில் பணிபுரிய ஆசை. அதே போல நடிகர்கள் விஜய்சேதுபதி, தனுஷ் இவர்களைப் பார்த்து எப்போதும் வியப்பேன். அஜித் சார் எப்போதும் என் ஃபேவரிட். அவருடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். என்றென்றும் அவர் எனது இன்ஸ்பிரேஷன்.” என்று பேசினார்.