"மீண்டும் பிறந்தாலும் நீயே வேண்டும்!" - பிறந்தநாளில் நயன்தாராவை உருகவைத்த விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: அரிய புகைப்படங்களுடன் விக்னேஷ் சிவன் பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ!
Nayan vikki
Nayanthara vignesh sivan Instagram
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ் சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவிற்கு , இன்று 42- வது பிறந்தநாள். தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து நயன்தாரா புகழ்பெற்றுள்ளார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களும் திரையுலகை சேர்ந்த அவரது நண்பர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடக்க காலத்தில் கேரளாவில் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விஜேவாக பணியாற்றியவர் நயன்தாரா. பின்னர் அவருக்கு பெரிய திரை வாய்ப்பு 'மனசினகாரே' திரைப்படத்தின் மூலமாக கிடைத்தது. தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் சரத்குமார் ஜோடியாக 'ஐயா' படத்தில் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவிற்கு கிடைத்தது. அந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நயன்தாரா. அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'சந்திரமுகி' திரைப்படத்தில் ஜோடி சேர்ந்தது முதல் , தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக மாறினார்.

அதன் பின்னர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து 'லேடி சூப்பர் ஸ்டார்' என்னும் பட்டத்தையும் பெற்றார். சமீப காலமாக ரஜினிகாந்துடன் அதிக திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமையும் நயன்தாராவிற்கு உண்டு. அது மட்டுமல்லாமல் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் முக்கிய தேர்வு ஆகவும் இருந்துள்ளார்.

​திரையுலகில் தனது உச்சத்தை நெருங்கும் போதே நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் மலர்ந்துள்ளது. 2015-ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தில் நயன்தாரா நடித்த போது தான் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டிருந்தது. அது காலப்போக்கில் அசைக்க முடியாத காதலாக மாறியது , தொடர்ச்சியாக பல வருடங்கள் பயணித்த இவர்களது காதல் 2022 ஆம் ஆண்டு திருமணத்தில் இணைந்தது.

vikki nayan
விக்கி நயன்

மிகவும் பிரம்மாண்டமான முறையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் , மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தேறியது. இவர்களின் திருமணத்திற்கு இந்தியாவை சேர்ந்த பெரிய நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமணத்தை பதிவு செய்து மொத்தமாக நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு ஒளிபரப்பும் உரிமையை வழங்கி இருந்தனர். தமிழ் திரையுலகில் அதிக விலைக்கு விற்ற நடிகையின் திருமண வீடியோ என்ற பெருமையும் இது பெற்றிருந்தது.

திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் 'உயிர்' மற்றும் 'உலகு' என்கிற இரட்டைக் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் 'மூக்குத்தி அம்மன்' இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். அத்துடன் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 'தர்மன்' திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் தனது மனைவி நயன்தாராவின் பிறந்த நாளை அவருக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் விக்னேஷ் சிவன் கொண்டாடி வருகிறார். இந்த வருடம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , நயன்தாராவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் , அரிதான அவர்களது போட்டோக்கள் கொண்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர்கள் இணைந்த முதல் திரைப்படமான , நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நீயும் நானும் அன்பே' பாடல் பின்னணியில் ஒலிக்க வீடியோ தொடங்குகிறது.

அந்த பதிவில் "மீண்டும் பிறந்தாலும் நீயே வேண்டும். லவ் யூ உயிர், உலக்.. என் தங்கமே" என விக்னேஷ் சிவன் காதலுடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது அனைவரின் கவனத்தைப் பெற்று செய்திகளில் வெளிவர தொடங்கி உள்ளது.