
மூக்குத்தி அம்மன் 2ஆம் பாகம் படத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்தவகையில், தற்போது மூக்குத்தி அம்மன் பாகம் 2 படத்தை எடுக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் 2020ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் பாலாஜி ஆகியோர் சேர்ந்து நடித்த காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் அம்மாவாக நடித்த ஊர்வசி மற்றும் மூன்று அக்கா தங்கைகளின் எதார்த்தமான நடிப்புகள் தனித்துவமாக இருந்தன. ஒரு நல்ல என்டெர்டெயின்மென்ட் படமாகவும், அதேசமயம் ஒரு நல்ல கருத்தைக் கொடுத்த படமாகவும் மூக்குத்தி அம்மன் இருந்தது.
முந்தைய காலங்களில் மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து அம்மன் கதாப்பாத்திரங்களில் நடித்தனர். அதன்பின்னர் நீண்டக் காலம் சாமி படங்கள் வராமல் இருந்தன.
அப்படி வந்தாலும் அவ்வளவாக ஹிட் கொடுக்கவில்லை. அந்தவகையில் மூக்குத்தி அம்மன் படத்தின்மூலம் மீண்டும் ஒரு அம்மன் படம் கம்பேக் கொடுத்தது அனைவரையும் ரசிக்க செய்தது. குறிப்பாக இப்படம் கொரோனா காலத்தில் வந்ததால், ஓடிடியில் மட்டுமே வெளியானது. இருப்பினும், ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பணிகள் ஆரம்பமானது. சுந்தர்.சி இயக்கத்தில் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் "மூக்குத்தி அம்மன்-2" ஆம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் பூஜைக்காக 1 கோடி ரூபாய் செலவிட்டு சென்னையில் வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுந்தர்.சி, நயன்தாரா இருவரும் முதல் முறையாக இணைந்து பணியாற்றும் படத்தின் பூஜையில் நயன்தாரா, துனியா விஜய், ரெஜினா கசண்ட்ரா, யோகிபாபு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தப் படத்துக்காக நயன்தாரா விரதம் இருந்ததாக படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறினார். இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி 'மூக்குத்தி அம்மன் 2' படத்துக்கு இசையமைக்கிறார். பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள், வலுவான கதைக்களம், நகைச்சுவை கலந்த படமாக 'மூக்குத்தி அம்மன்' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.