
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகள் வரை உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டபின், படங்களில் நடிப்பதை சற்று குறைத்துக் கொண்டார் நயன்தாரா. அதோடு கடைசியாக இவரது நடிப்பில் வெளியான அன்னபூரணி மற்றும் டெஸ்ட் ஆகிய படங்கள் சொல்லிக் கொள்ளும் படி ரசிகர்களை ஈர்க்கவில்லை. இருப்பினும் தற்போது நயன்தாரா நடித்திருக்கும் பல படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன.
நீண்ட நாட்கள் கழித்து ஒரு வெற்றிப் படத்திற்காக நடிகை நயன்தாரா காத்துக் கொண்டிருக்கிறார். நயன்தாராவைப் போலவே அவரது கணவர் விக்னேஷ் சிவனும் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் எல்ஐகே (LIK) என்ற படத்தை இயக்கி வருகிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, தல அஜித்தை இயக்கவிருந்தார் விக்னேஷ் சிவன். இருப்பினும் ஒருசில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.
அடுத்த படத்திற்கான தேடலைத் தொடங்கிய போது தான் பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. டிராகன் படம் மெகா ஹிட் வெற்றியைப் பதிவு செய்ததால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருகாலத்தில் நயன்தாராவின் கதைத் தேர்வு அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருந்தது. நயன்தாரா நடித்தாலே அந்தப் படம் வெற்றி என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் நம்பும் அளவிற்கு நயன்தாரா வளர்ந்து வந்தார். கதாநாயகர்கள் இன்றி கதாநாயகியாக மட்டுமே நடித்தும் சில படங்களில் வெற்றி கண்டுள்ளார் நயன்தாரா. ஆனால் தற்போது வெற்றிப் படத்தைக் கொடுக்க சற்று தடுமாறி வருகிறார்.
அன்னபூரணி திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூலில் தோல்வியைத் தழுவியது. அதேபோல் நேரடி ஓடிடி ரிலீஸாக வெளிவந்த டெஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து விட்டது.
தற்போது சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. முதல் பாகம் நயன்தாராவுக்கு வெற்றியைக் கொடுத்ததால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுமட்டுமின்றி தமிழில் ராக்காயி, மண்ணாங்கட்டி மற்றும் நடிகர் கவினுடன் ஒரு படம் என மொத்தம் 3 படங்களில் நடித்து வருகிறார்.
கோலிவுட் தவிர்த்து கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தலா 1 படமும் திரைக்கு வர இருக்கின்றன. இதில் கன்னடத்தில் ராக்கி பாய் யாஷ் உடன் டாக்ஸிக் என்ற படம் பான் இந்திய ரிலீஸாக வெளிவர இருக்கிறது. இப்படம் வெற்றியடையும் பட்சத்தில் இழந்த தனது மார்க்கெட்டை மீண்டும் பிடித்து விடுவார் நயன்தாரா.
நடிகர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகி விட்டன. தற்போது இருவருமே ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க முழு முயற்சியோடு தயாராகி வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் சினிமாவில் சரியான வெற்றி கிடைக்காத நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.