Interview: "முள்ளிவாய்க்காலோடு நாங்கள் முடிந்துவிடவில்லை!" - ஈழத்து இயக்குநர் சோமீத்ரனின் அதிரடி நேர்காணல்!

Neelira Movie Director Someetharan
Neelira Movie Director Someetharan
Published on
Kalki Strip
Kalki Strip

போரினால் பாதிக்கப்பட்ட நமது ஈழத்து மக்களை பற்றி படங்கள் இல்லை. முதல் முறையாக ஈழத்து மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படமான நீளிரா என்ற படத்தை தர உள்ளார் ஈழம் இயக்குநர் சோமீத்ரன்.

இவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தவர். மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் சில காலம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

நீளிரா படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார். நடிகர் ராணா ரிலீஸ் செய்கிறார். சோமீத்ரன் 'யாழ்ப்பாண நூலக எரிப்பு' உட்பட பல்வேறு ஆவண படங்களை இயக்கியவர். ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாக உள்ள நீளிரா படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாக இருந்த சோமீத்ரன், நமது கல்கி ஆன்லைன் இதழுக்கு அளித்த நேர்காணல் இங்கே...

Q

நீளிரா என்பது ஈழ தமிழா?

A

நீளிரா என்ற சொல் சங்க தமிழில் இருக்கும் தமிழ் சொல். இதன் பொருள் நீண்ட இரவு என்பதாகும்.

Q

நீங்கள் சொல்லப் போகும் நீண்ட இரவு எதைப்பற்றியது?

A

1980 களில் ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஒரு திருமணத்திருக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. திருமணதிற்கு முதல் நாள் இரவு நடக்கும் விஷங்களை பின்னணியாக கொண்டது இப்படம். இது Survival Thriller வகையை சார்ந்தது.

Q

Survival Thriller என்றால் இது கமர்சியல் படம் என்று சொல்லுங்கள்..?

A

இது கமர்சியல் படம் தான், மாற்று கருதில்லை. தாய் கிழவி யதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை கமர்சியலாக சொல்லிய படம். அதில் ஒரு வாழ்வியல் இருந்தது. இதே போல் என்னுடைய நீளிரா படத்திலும் யதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை காமர்சியல் தளத்தில் சொல்லி இருக்கிறேன்.

Q

இந்த படம் எடுக்க இன்ஸ்பிரேசனாக அமைந்த விஷயம் என்ன?

A

இரண்டாம் உலக போர் கால கட்டத்தில் ஹிட்லர் செய்த கொடுமைகளை மைய்யப்படுத்தி, 'Life Is Beautiful', 'The Pianist' உடப்பட எண்ணற்ற படங்கள் வந்துளன. போர் என்றால் இரண்டு குழுக்கள் மோதி கொள்வது, வெற்றி, தோல்வி என்று தான் நினைக்கிறோம். ஆனால், இந்த காலத்தில் போர் நடக்கும் பகுதியில் மக்கள் என்ன செய்தார்கள்? மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? என்று நம்மில் பலருக்கு தெரியாது.

நான் இங்கே குறிப்பிட்ட உலக சினிமாகள் அனைத்துமே போர் காலத்தில் மக்களின் வாழ்க்கையை பற்றி பேசிய படங்கள். இது போன்ற படங்கள் தான் நான் படம் இயக்குவதற்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்த விஷயம்.

தமிழ் சினிமா சென்னை, மதுரை, கோவை, நெல்லை என பல பகுதிகளின் தெருக்களையும், நாகரீகத்தையும் பதிவு செய்துள்ளது. ஆனால், ஈழத்தை பற்றி எந்த பதிவும் தமிழ் சினிமா செய்யவில்லை. ஈழத்தை பற்றி பதிவு செய்யும் முயற்சிதான் நீளிரா.

Q

ஈழ போரின் போது மக்களின் வாழ்வியலை எப்படி பதிவு செய்துள்ளீர்கள் என்பதை புரியும் படி சொல்ல முடியுமா?

A

நான் பிறந்ததிலிருந்து இருப்பதைந்து ஆண்டுகள் வரை போர் சூழ்நிலையில் வளர்ந்தேன். 1980 மற்றும் 90 களின் போர் சூழ்நிலையில் தான் பள்ளியில் படித்தேன். பொதுவாக பள்ளிகள் ஆண், பெண் இருபாலருக்கும் தனித் தனியாக இருக்கும். போர் நடக்கும் சமயங்களில் பள்ளிகள் மூடப்பட்டு நாங்கள் தங்கும் முகாம்களின் அருகே வகுப்புகள் நடக்கும். இந்த வகுப்புகள் இருபாலருக்கும் சேர்ந்து நடக்கும். இங்கே சில காதலும் மலரும். முகாம்களின் அருகே குண்டுகள் போடப்படும் போது பதுங்கி கொள்ள பல பங்கர்கள் (பதுங்கு குழி) இருக்கும். ராணுவம் குண்டு போடும் நேரத்தில் கூட, சில மாணவர்கள் தாங்கள் காதலிக்கும் பெண் எந்த பங்கர்குள் செல்கிறாள் என்று பார்த்து அந்த பங்கர்க்குள் செல்ல சில மாணவர்கள் முயற்சி செய்வார்கள். போர் சூழ்நிலையில் கூட இது போன்ற அழகான காதல் மலரும். இதே போல் திருமணம், சடங்குகள் போன்ற வாழ்வியலும் இந்த போருக்கு நடுவே நடக்கும்.

Q

ஈழ தமிழர்கள் பற்றி பேசும் படத்தில் தெலுங்கு ஹீரோ நவீன் சந்திரா எதற்கு?

A

இந்த படம் பார்த்த பின்பு நவீன் சந்திரா ஏன் என்று கேட்க மாட்டீர்கள். கயல் வின்சென்ட் உட்பட பல இலங்கை தமிழர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான ஒரு இலங்கை படத்தில் நமசிவாயம் என்பவர் ஹீரோவாக நடித்தார். அதன் பின்பு சில வருடங்களில் போர் காரணமாக புலம் பெயர்ந்து சுவிட்ச்சர்லாந்த் நாட்டிற்கு சென்று விட்டார். நமசிவாயம் அய்யா நீளிரா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

Q

இந்த படத்தில் 'Kaliyaana Bailaa' நல்ல வரவேற்பை பெற்று வருகிறதே? எப்படி உருவானது இந்த பாடல்?

A

ஈழத்திற்கு என்றே ஒரு ராப் இசை வடிவம் உள்ளது. 80களில் இலங்கை தமிழ் பாடல்களை கேட்டவர்களுக்கு இது புரியும். இதை போன்ற பாடல் வேண்டும் என நினைத்து இந்த பாடலை வைத்துள்ளேன். இந்த படதிற்கு இசை கே. ஆனால் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் இசை அமைத்தவர் பத்மயன் என்பவர். வாயூசன், சில்பிஷா பிரணவ் என இலங்கையை சேர்ந்த மூன்று பேர் இந்த பாடலை பாடி உள்ளார்கள்.

Q

மறைந்த பாலுமஹேந்திரா அவர்களிடம் பணியாற்றிய அனுபவம்!

A

பாலுமஹேந்திரா அவர்களை சந்தித்த போது, 'நான் இப்போது படங்கள் எதையும் செய்யவில்லை. என்னிடம் ஏன் சேர்க்கிறாய்?' என்றார். பாலுமகேந்திரா எங்கள் ஈழத்தை சேர்ந்தவர். சிறுவயதில் 'இது பாலுமாகேந்திரா சார் வீடு' என எங்கள் பகுதியில் அவர் வாழ்ந்த வீட்டை பார்த்து பரவசம் அடைந்துள்ளேன். பாலு சாரும் ஈழ தமிழர் என்பதால் விடாப்பிடியாக இருந்து அவரிடம் சேர்ந்து கொண்டேன்.

"நான் ஈழ தமிழர்கள் வாழ்க்கையை படமாக எடுக்க நினைத்தேன். என்னால் முடியவில்லை. நீ எடுக்கும் முதல் படமாவது ஈழத்தமிழர் படமாக இருக்க வேண்டும்" என்று சொன்னார், அவர் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன்.

Q

ஒரு ஈழ தமிழராக இந்த சூழ்நிலையில் சொல்ல விரும்புவது என்ன?

A

நான் போரின் காரணமாக இடம் பெயர்ந்து ஈழத்தின் பல பகுதிகளில் வாழ்ந்தேன். நான் வாழ்ந்த வீடும் எங்கள் பூர்வீக வீடும் போரில் தரைமட்டமாகி விட்டன. என் தலைமுறையில் வாழ்ந்த பலர் கொல்லப்பட்டு விட்டனர். இப்போது உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் இந்த சோகம் இருக்கும். இருந்தாலும் நாங்கள் சோர்ந்து விடவில்லை. எங்கள் படைப்புகள் வழியே நாங்கள் எழுந்து நிற்கிறோம். எங்களிடம் கதைக்க ஆயிரம் கதைகள் உள்ளன. முள்ளிவாய்க்காலோடு நாங்கள் முடிந்து விடவில்லை, என்று இந்த உலகிற்கு சொல்லிக் கொள்கிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com