

"நம்ம ஊர்ல இருக்கறவனுங்க பத்து பெர்சன்ட் வட்டிக்கு பணம் தந்தா வயித்தெரிச்சலோட பணம் வாங்கிட்டு வட்டிக்கு பணம் தந்தவனை திட்டிகிட்டே திரும்பி அசலும் வட்டியும் தருவாங்க.. ஆனா இதே மக்கள் ஏதாவது ஒரு சிட்பண்ட் கம்பெனி காரன் பத்து பெர்சன்ட் பணம் வட்டி தரேன் என்று சொன்னால் யோசிக்காம கண்ணனை மூடிகிட்டு அந்த சிட்பண்ட்டில் பணம் போடுவாங்க. ஒரு நாள் அந்த சிட்பண்ட் காரன் பணத்தை சுருட்டிக்கிட்டு ஓடி விடுவான். நம்ம மக்களேடாபேராசைதான் என்னை மாதிரி மோசடி பேர்வழிகள் உருவாக காரணம்." என்று நிர்வாகம் பொறுப்பல்ல படத்தின் டைரக்டர் மற்றும் ஹீரோவான 'கார்த்தீஸ்வரன்' படத்தில் ஒரு காட்சியில் சொல்லும் போது, கடந்த சில ஆண்டுகளில் தமிழ் நாட்டில் அதிக வட்டி தருவதாக சொல்லி மக்களின் பணத்தை சுருட்டி கொண்டு ஓடிய நிதி நிறுவனங்களின் பெயர்கள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.
இந்த படத்தின் நாயகன் கார்த்தீஸ்வரன் , நான்கு விதமான மோசடிகள் செய்து மக்களை ஏமாற்றுகிறார்.
பாலியல் ஆர்வத்தால் மொபைலில் சாட் செய்யும் இளைஞர்களை குறி வைத்து அவர்களை பிளாக்மெயில் செய்து பணம் அடிக்கிறார்.
ஒரு நிதி நிறுவனம் தொடங்கி கவர்ச்சிகரமான வட்டி தருவதாக அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பெற்று கொண்டு ஒரு வருடத்தில் எஸ்கேப் ஆகி விடுகிறார்.
250 ரூபாய்க்கு மொபைல்தருவதாக சொல்லி சில கோடிகளை அள்ளி விடுகிறார்.
எத்தனை பெரிய 'அப்பா டக்கராக' இருந்தாலும் காதலில் விழுந்தால் குட்டு வெளிப்பட்டு தானே ஆகும். கார்த்தீஸ்வரன் ஒரு பெண்ணின் காதலில் விழுகிறார். திருடிய கை சும்மா இருக்குமா? இந்த பெண்ணிடமும் ஐநூறு கோடி அபேஸ் செய்து விடுகிறார்.
இந்த பெண் தன் தோழியாக இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சொல்ல இன்ஸ்பெக்டர் கார்த்தீஸ்வரனின் அனைத்து திருட்டுகளையும் கண்டு பிடித்து விடுகிறார். இறுதியில் ஹீரோ என்ன செய்தார் என்று சொல்கிறது 'நிர்வாகம் பொறுப்பல்ல'.
படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் கார்தீஸ்ஸ்வரன் 'இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதை போல் சாதுவான தோற்றம், அப்பாவி முகம் என இருந்து கொண்டு செய்யும் மோசடிகள் அனைத்தும் வேறலெவல் என்று சொல்ல வைக்கிறார்.
நன்றாக நடித்திருந்தாலும் ஒரு சில கெட்டப் இவருக்கு செட்டாக வில்லை. குறிப்பாக சீனா காரர் போல் வேஷம் போடுவது பொருந்த வில்லை. மற்ற படி நடனம், வசன உச்சரிப்பு, போன்றவைகளை சரியாக செய்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீநிதி சிறிது கூட சிரிக்காமல் டெரர் அதிகாரியாக நடித்தது நன்றாக உள்ளது.
ஹீரோவின் மோசடி கும்பலில் இடம் பெரும் மிருதுளா, ஆதவன் என அனைவரும் சரியாக நடித்திருக்கிறார்கள். பணத்தை பறிகொடுத்த ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவன் எப்படி எல்லாம் கதறி அழுவான் என்பதை தனது ஆக சிறந்த நடிப்பின் மூலம் தந்துள்ளார் லிவிங்ஸ்டன்.
நடிப்பிலும் உடல் அசைவிலும் பாவனைகளிலும் நாற்பதாண்டுகள் நடிப்பின் அனுபவம் தெரிகிறது. (பான் இந்திய படங்கள் வந்த பிறகு தமிழ் நாட்டில் உள்ள தன்னை போன்ற தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று லிவிங்ஸ்டன் ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தார். இவரை இந்த படத்தில் சரியாக பயன் படுத்தியதற்கு இயக்குனரை பாராட்டலாம்)
மொபைல் போனை ஆபாச இச்சைகளுக்கு பயன் படுத்துபவர்கள், இந்த படத்தில் ப்ளாக் பாண்டி படும் பாட்டை பார்த்தால் இனி ஆபாச வெப்சைட்களுக்கு ஒரு கும்பிடு போட்டு விடுவார்கள்.
ஸ்ரீ காந்த தேவாவின் பின்னணி இசை இரைச்சலாகவும், பாடல்கள் துள்ளலாகவும் இருக்கிறது.
படம் நகரும் விதம் நன்றாக இருந்தாலும் படத்தில் 'CRIME AND PUNISHMENT' என்ற விஷயத்தை டைரக்டர் கண்டு கொள்ளவேயில்லை. மக்களின் பேராசைதான் இது போன்ற மோசடிகளுக்கு காரணம் என்று டைரக்டர் சொல்கிறார். உண்மைதான் மாற்று கருத்தில்லை. இருந்தாலும் சட்டத்தின் முன் இது போன்ற மோசடி பேர்வழிகள் தண்டிக்க படவேண்டும். கிளைமாக்ஸ் காட்சியில் மோசடி பேர்வழி சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பி செல்வது போல காட்டியுள்ளார்கள்.
ஒரு சிறந்த கலைப்படைப்பு என்பது தவறை நியாப்படுத்தக்கூடாது. இந்த படத்தில் வெளிப்படையாக மோசடியை நியாய படுத்துவதன் மூலம் மனதில் நிற்க தவறி விடுகிறது நிர்வாகம் பொறுப்பல்ல திரைப்படம்.
பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு நியாயத்தை வழங்கி இருந்தால் சற்று பொறுப்புடன் செயல் பட்டுள்ளார்கள் என்று சொல்லி இருக்கலாம். மற்றபடி நிர்வாகம் பொறுப்பல்ல - பொறுப்புடன் சொல்லியிருக்கலாம் .