

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் ஏற்கனவே பிரபலமாகியவர். சமீப காலத்திற்கு முன்பு தான் இவர் சட்ட விரோதமாக, அனுமதி பெறாமல் கார் வைத்திருந்த பிரச்சனையில் சிக்கியிருந்தார் .அது முடியும் முன்னரே அடுத்த சிக்கல் அவருக்கு வந்து விட்டது. ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணி நஞ்சானது தொடர்பாக கேரள நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் ஒரு புகார் நோட்டீஸை துல்கருக்கு அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸ் படி டிசம்பர் 3 ஆம் தேதி துல்கர் சல்மானை நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24 அன்று பத்தனம்திட்டா, வள்ளிகோட்டை பகுதியில் ஒரு திருமண விழா நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் பிரியாணி மற்றும் கோழிக்கறி ஆகியவை தயாரிக்கப்பட்டு விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் சாப்பிட்ட பலருக்கும் உடனடியாக வாந்தி, மயக்கம், மற்றும் கடும் வயிற்று வலி உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் உடனடியாக ஏற்பட்டன.
நிலைமை மோசமடையவே, பாதிக்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கேட்டரிங் உரிமையாளர் ஜெயராமன் உடனடியாக நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ரோஸ்பிராண்ட் அரிசி விளம்பரத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ளதால் , அவர் மேல் உள்ள நம்பிக்கையில் அந்தப் பொருளின் தரம் குறித்து அறியாமல் , அந்த அரிசியை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரோஸ் பிராண்ட் பிரியாணி அரிசியை வாங்குவதற்கு அதன் தொடர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தான் தூண்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் பிரியாணி சமைக்கப் பயன்படுத்தப்பட்ட 50 கிலோ பிரியாணி அரிசிப் பையில் காலாவதி தேதி முன்பே முடிந்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இந்தத் தரமற்ற அரிசியே உணவு நஞ்சாகக் காரணம் என்று ஜெயராமன் புகாரில் எழுதியுள்ளார்.இந்த புகாரில் ரோஸ் பிராண்ட் பிரியாணி அரிசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முதல் குற்றவாளியாகவும், பத்தனம்திட்டா மலபார் பிரியாணி மசாலா கடை உரிமையாளர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடிகர் துல்கர் சல்மான், விளம்பரத் தூதர் என்ற அடிப்படையில், மூன்றாவது குற்றவாளியாகக் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு குறித்த விளம்பரத்தைப் பார்க்கும் மக்கள், அதன் பிராண்ட் தூதரின் நம்பகத்தன்மையின் அடிப்படையிலேயே அந்தப் பொருளை வாங்குகிறார்கள் என்று துல்கர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதற்கு விளக்கமும் கொடுத்துள்ளனர்.
இந்த உணவு நஞ்சான சம்பவத்தால், புகார்தாரரான ஜெயராஜனின் கேட்டரிங் நிறுவனத்திற்கு கிடைத்த பல ஆர்டர்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது புகாரில் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தொழில் நஷ்டத்திற்கு இழப்பீடாக ₹5 லட்சமும் , சம்பவத்திற்கு காரணமாக ரோஸ்பிராண்ட் 50 கிலோ அரிசியின் விலையான ₹10,250 உடன் சேர்த்து ₹5,10,250 குற்றம் சாட்டப் பட்டவர்களிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்றும் மனு செய்திருந்தார்.
நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் பேபிசான் வெச்சுசிரா மற்றும் உறுப்பினர் நிஷாத் தங்கப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் ஆணையத்தின் முன் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இதற்கு முன் இது போன்று விளம்பரத் தூதுவராக நடித்திருந்த ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனும் சிக்கலில் மாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.