

பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்த படம் ‘பாகுபலி’. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகமாக வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய சினிமா வரலாற்றில் பாகுபலி திரைப்படங்கள் வசூல் ரீதியில் புதிய உச்சத்தை தொட்டன. இந்த படங்கள் பான் இந்தியா என்கிற ட்ரெண்டை உருவாக்கின.
2015-ம் ஆண்டு முதல் பாகம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்கிற கேள்விக்கு விடையாக 2017-ம் ஆண்டு வெளிவந்தது தான் பாகுபலி 2.
இந்திய சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான பாகுபலி 2 உலகளவில் ரூ.1800 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், இந்திய சினிமாவையே மிரட்டி பார்த்த பாகுபலி படம் வெளிவந்து 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், படத்தின் 2 பாகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு, ‘பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் புதிய படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
கடந்த வாரம் உலகளவில் மொத்தமாக 1,150-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியான 'பாகுபலி: தி எபிக் ’ படத்தின் பிரம்மாண்ட அனுபவத்தை திரையில் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். இப்படம் இதுவரை உலகளவில் ரூ.45+ கோடி வசூல் செய்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் ரீ-ரிலீஸில் 100 கோடி வசூலை பாகுபலி தி எபிக் எட்ட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டு பாகங்களில் இருந்து பெரும்பாலான காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமன்னாவின் காதல் காட்சிகள் உள்பட பல்வேறு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறும்போது, ‘பாகுபலி படத்தின் ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சி ரீதியாகவும், கதை ரீதியாகவும் முக்கியமானது. ஆனால், புதிய பதிப்பு முற்றிலும் கதை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இரண்டு பாகங்களை இணைத்த பிறகு படத்தின் நீளம் 5 மணி நேரம் 27 நிமிடங்களாக இருந்தது. முதலில் ‘எடிட்டிங்' செய்தபோது 4 மணி, 10 நிமிடங்கள் இருந்தது.
சினிமா மற்றும் மற்ற துறையிலுள்ள பார்வையாளர்களுக்கு சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்தோம். அவர்கள் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் காதல் காட்சி, பாடல்கள் உள்ளிட்ட பல பகுதிகள் நீக்கப்பட்ட பிறகு 3 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக் கூடிய படமானது.
முற்றிலும் கதை சார்ந்த படைப்பாக 'பாகுபலி: தி எபிக்' படத்தினை உருவாக்க திட்டமிட்டிருந்ததால், தமன்னா, பிரபாஸ் காதல் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் நீக்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது’, என்று விளக்கமளித்துள்ளார்.