

பால் தாமஸ் ஆண்டர்சன் ஒரு புகழ்பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் அவர் ஜூன் 26 , 1970 லில் · ஸ்டுடியோ சிட்டி, கலிபோர்னியாவில் பிறந்தவர். அவர் "வீடியோ ஸ்டோர்" தலைமுறை திரைப்படத் தயாரிப்பாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். அவரது தந்தைதான் அவர் வசித்த தெருவில் விசிஆர் வைத்திருந்த முதல் மனிதர். மிகச் சிறு வயதிலிருந்தே ஆண்டர்சனுக்குப் பார்ப்பதற்கு ஏராளமான திரைப்படங்கள் கிடைத்தன. ஸ்பீல்பெர்க் போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் 8 மிமீ திரைப்படங்களைத் தயாரிப்பதில் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்ட வேளையில், ஆண்டர்சன் வீடியோவில் திரைப்படங்களைப் படம்பிடித்து, அவற்றை விசிஆரிலிருந்து விசிஆருக்குத் தொகுப்பதில் தனது திறமையை வளர்த்துக்கொண்டார்
1996-ல் வெளியான "ஹார்ட் எய்ட்" திரைப்படத்தின் மூலம் ஹாலிவுடில் அவர் அறிமுகமானார். தனிமை மற்றும் மனித உறவுகளை ஆராய்ந்த அந்த திரைப்படம் அவரை ஒரு தவிர்க்க முடியாத இயக்குநராக மாற்றியது மேலும், நடிகர்களிடமிருந்து நுட்பமான மற்றும் இயல்பான நடிப்பை வெளிக்கொணரும் அவரது திறமையையும், கவனமான கதையோட்ட வேகத்தையும் அத்திரைப்படம் வெளிப்படுத்தியது. இந்தத் திறமை, அவரது அடுத்தடுத்த திரைப்படங்களான "பூகி நைட்ஸ்", "மேக்னோலியா", "பஞ்ச்-டிரங்க் லவ்", "தேர் வில் பி பிளட்" மற்றும் பலவற்றில் இன்னும் வலுவான முறையில் வெளிப்படுத்தப்பட்டது.
2008 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில், டேனியல் டே-லூயிஸ் நடித்த 'தேர் வில் பி பிளட்' படத்திற்காக அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் புறக்கணிக்கப்பட்டார். அந்த ஆண்டு, மார்ட்டின் ஸ்கோர்செசி சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார்.
பூகி நைட்ஸ், மேக்னோலியா, தேர் வில் பி பிளட் மற்றும் பான்டம் த்ரெட் போன்ற விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட திரைப்படங்களுக்காக இவர் புகழ்பெற்றாலும் . இவருடைய படைப்புகள் 11 முறை ஆஸ்கார் விருதுக்கு கடந்த 26 வருடங்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை.' ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (one battle after another,) 2025 ம் ஆண்டின் மாபெரும் வெற்றி திரைப்படம்.அவரது முதல் படத்திற்குப் பிறகு 28 வருட காத்திருப்புக்கு இந்த திரைப்படம் முற்றுப்புள்ளி வைக்கும் என்று காத்திருந்தார்.
அவரது காத்திருப்பு வீண் போகவில்லை என்பது போல 98 வது ஆஸ்கார் விருதுக்கு,13 பிரிவுகளில் போட்டியிட்ட 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர், சிறந்த கேஸ்ட்டிங், சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த தழுவல் (Adapted )திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மொத்தம் 6 விருதுகளை வென்றுள்ளது.பால் தாமஸ் ஆண்டர்சன் அகாடமி விருதுகளில் தனது முதல் ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளார்.
ஆறு ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்திருப்பதால் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் இந்த ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் படத்தை தேடித்தேடி பார்த்து வருகிறார்கள்.இந்த திரைப்படம் தாமஸ் பின்சனின் 1990 ம் ஆண்டு வெளிவந்த நாவலான 'வைன்லேண்டின் 'தழுவலாகும், மேலும் லியோனார்டோ டிகாப்ரியோ தனது டீனேஜ் மகளுடன் ஒரு புனைப்பெயரில் வாழும் முன்னாள் புரட்சியாளராக நடித்துள்ளார்.
பொலிட்டிக்கல் டிராமா என்ற பேனரில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு புரட்சியாளராக பல்வேறு சம்பவங்களை செய்த நபர் அமைதியாக வாழ நினைக்கிறார். அந்த முயற்சியில் அவருடைய முன்னாள் எதிரிகள் என்னென்ன இடையூறுகளைத் தருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைனாக உள்ளது.
இதற்கிடையே காணாமல் போன தனது மகளை கண்டுபிடிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சி மற்றும் அதன் பின்னால் உள்ள அரசியல் சூழ்ச்சிகள் ரசிகர்களுக்கு அதிக விறுவிறுப்பைத் தருகின்றன.இந்த ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, சீன் பென், செஸ் இன்ஃபினிட்டி, டயானா டைலர், ரெஜினா ஹால் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.