விமர்சனம்: ஒரு நொடி - திரைக்கதையில் அதிரடி!
ரேட்டிங்(3.5 / 5)
நம்ம தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு? சில மாதங்களாக குறைந்த எண்ணிக்கை படங்கள்தான் ரிலீஸ் ஆகுது. ரிலீஸ் ஆகும் படங்களில் பல படங்கள் பார்க்க பத்து பேர்கூட இல்லாமல் தியேட்டரில் ஷோ கேன்சல் ஆகுது. மலையாளப் படங்கள் இங்கே கல்லா கட்டுது. பகத் பாசிலும், வினீத் ஸ்ரீனிவாசனும் தமிழ்நாட்டு மக்களுக்குப் பிடித்த ஹீரோக்களா மாறிகிட்டு இருக்காங்க. இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலமே இல்லையா என புலம்பும் தமிழ் ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் படமாக வந்துள்ளது ‘ஒரு நொடி’ திரைப்படம்.
மணிவர்மன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். தருண் குமார், வேல ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர் நடித்துள்ள இப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
மதுரையில் சேகரன் என்பவர், தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க செல்லும்போது காணாமல் போகிறார். கடன் தந்து மற்றவர்களின் சொத்தை நயவஞ்சகமாக அபகரிக்கும் கரிமேடு தியாகு என்பவரை கைது செய்து விசாரணை செய்கிறது போலீஸ். இந்தச் சூழ்நிலையில் மதுரையில் ஓர் இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இப்பெண்ணின் காதலன், தந்தை என அனைவரையும் விசாரணை செய்கிறது காவல் துறை. எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஒரு நொடி, ஒரு விஷயம் காவல் துறை அதிகாரி மனதில் பிளாஷ் அடிக்கிறது. இந்த விஷயம் குற்றவாளியைப் பிடிக்க உதவுகிறது. அந்த விஷயம் என்ன என்பதுதான் சுவாரசியமான ட்விஸ்ட்டாக அமைகிறது..
நம் தமிழ் இயக்குநர்களாலும் திரில்லர் படத்தைச் சிறப்பாக தர முடியும் என நிரூபித்து உள்ளார் மதுரை மண்ணின் இயக்குநர் மணிவர்மன். மாறுபட்ட மதுரையை காட்டி அறிவியல் பூர்வமான திரில்லர் படத்தை தந்துள்ளார்.
ஒரு சிறு பிசிறு தட்டினாலும் குழம்பும் திரைக்கதையில் சிறு குழப்பமும் இல்லாமல் படம் நகர்கிறது. தொடர்ந்து விசாரணை செய்வதாக படம் நகர்வது சற்று சலிப்பாக இருந்தாலும், ஒவ்வொரு விசாரணையின் முடிவிலும் ஒரு ட்விஸ்ட் இருப்பதால் ரசிக்க முடிகிறது.
‘எந்தக் கேரக்டரானாலும் தந்து பாரு’ என சவால் விடும் எம். எஸ். பாஸ்கர் இந்தப் படத்தில் சேகரனா சபாஷ் போட வைக்கிறார். அரசியல் பின்புலம் கொண்ட தாதாவாக அசால்ட் செய்கிறார் வேல ராம மூர்த்தி. நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் தருண் குமார் என்பது பாராட்ட வேண்டிய விஷயம். சாக்லேட் பாய் போல இருப்பவர் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு அழகாக விசாரணை செய்வது நன்று! இதுபோன்று தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னணி ஹீரோவாக வர வாய்ப்புள்ளது.
பார்வதி கேரக்டரில் வரும் நிகிதா ஒரு மதுரை பெண்ணை கண் முன் கொண்டு வருகிறார். அப்பாவிடம் காதலுக்காகச் சண்டை போடும் போதும், காதலனிடம் காதலை ஏற்கும்போதும் மிக இயல்பான நடிப்பு.
சஞ்சய் மாணிக்கத்தின் இசை திரில்லர் காட்சிகளில் நம் பயத்தை அதிகரிக்க வைக்கிறது.குரு சூர்யாவின் படத் தொகுப்பும், ரத்தீஷின் ஒளிப்பதிவும் இரு தூண்களாக படத்தைத் தாங்கி நிற்கின்றன. நல்ல டீம் சேர்ந்து ஒரு நல்ல படம் தந்துருக்காங்க. அவசியம் போய் பாருங்க.