ராஜமௌலியை அழைக்கும் ஆஸ்கர் விருது குழு!

Rajamouli
Rajamouli

தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் திரைப்படம் வெளியாகிறது என்றாலே, தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், ஆஸ்கர் விருது குழுவில் இணையுமாறு ராஜமௌலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

பான் இந்தியா திரைப்படங்களுக்கு பாகுபலி திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் விதை போட்டவர் இயக்குநர் ராஜமௌலி. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் பான் இந்தியத் திரைப்படங்கள் அதிகரித்தன. மேலும் இத்திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கு சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்திய பெருமை இவரையேச் சேரும். இப்படத்திற்கு பின் இவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதுதவிர இப்படம் 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்று வரலாறு படைத்தது. இத்தனை சாதனைக்கும் சொந்தக்காரரான ராஜமௌலி, தற்போது ஆஸ்கர் விருது குழுவில் இணையப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திரைத்துறையில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதைத் தேர்வு செய்யும் குழுவில் இணைவது என்பது சாதாரண ஒன்றல்ல. இக்குழுவில் இணைய திரைத்துறையில் சில சாதனைகளைப் புரிந்திருக்க வேண்டும்‌. இதனடிப்படையில் தான் ஆஸ்கர் அகாடெமியே தாமாக முன்வந்து தேர்வுக் குழுவில் இணைய பல நாடுகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் புதிய உறுப்பினர்களை, ஆஸ்கர் விருதைத் தேர்வு செய்யும் குழுவில் இணைத்து வருகிறது ஆஸ்கர் அகாடெமி. 2024 ஆம் ஆண்டில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பொருட்டு சுமார் 57 நாடுகளில் இருந்து 487 திரையுலகக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய நாட்டைச் சேர்ந்த கலைஞர்களும் அடங்குவர்.

இந்தியாவில் தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி, இவரின் மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான ரமா ராஜமௌலி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இயக்குநர் ரீமா தாஸ், ஆடை வடிவமைப்பாளர் ஷீதல் ஷர்மா, தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வாணி, இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் ஆர்ஆர்ஆர் படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக் ஷித் ஆகிய திரைக் கலைஞர்களுக்கு ஆஸ்கர் அகாடெமி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியக் கலைஞர்கள் உள்பட அனைத்து நாட்டு திரைக் கலைஞர்களும் ஆஸ்கர் அகாடெமியின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, தேர்வுக் குழுவில் இணைந்து விட்டால், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,910 ஆக அதிகரிக்கும். இதில் சுமார் 9,934 உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆஸ்கர் நாயகன் கிறிஸ்டோபர் நோலன் சுவாரஸ்ய தகவல்கள்!
Rajamouli

ஏற்கனவே தமிழ்த் திரையுலகம் சார்பில் இயக்குநர் மணிரத்னம், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ஆஸ்கர் அகாடெமியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் தென்னிந்திய பிரபலங்கள் ஆஸ்கர் குழுவில் இணைவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com