ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட சந்தோஷ் என்ற படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இங்கிலாந்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
திரையுலகில் மிகப்பெரிய விருது என்றால், அது ஆஸ்கார் விருதுதான். உலக படங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர், படம், நடிகை, துணை நடிகர் நடிகை, இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். இந்த பிரம்மாண்ட விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விழா கடந்த மார்ச் 2ம் தேதி நடந்து முடிந்தது.
அந்தவகையில் பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி ஒரு படத்தை இயக்கினார். அப்படத்தின் பெயர் சந்தோஷ். இப்படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் படம் வட இந்தியாவில் நடக்கும் ஒரு கதையாக அமைந்துள்ளது. அதாவது,வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்ணுக்கு அந்த கணவின் பணியான போலீஸ் வேலை கிடைக்கிறது. அந்த பெண் காவல் அதிகாரியிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் இனப் பாகுபாடு உள்ளிட்டவற்றை இப்படம் எடுத்துக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை நீக்குமாறு தணிக்கை வாரியம் கூறியது. இதற்கு அந்தப் படக்குழு மறுத்துவிட்டது. ஆகையால், அந்தப் படம் இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் நாயகி ஷஹானா கோஸ்வாமி பேசுகையில், “படத்தை வெளியிடுவதற்குத் தேவையான சில மாற்றங்களின் பட்டியலை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. எங்கள் முழு குழுவுக்கும் அதில் உடன்பாடில்லை. காரணம், அவர்கள் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்கள். எனவே, இந்தியத் திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை. இந்தியாவில் வெளியிட இவ்வளவு தணிக்கைகளும் மாற்றங்களும் தேவைப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.” என்று தெரிவித்தார்.
இந்தப் படத்திற்காக அவர் ஆசியவின் சிறந்த நடிகைக்கான விருதை வாங்கியுள்ளார்.
மேலும் இயக்குநர் சந்தியா சூரி பேசுகையில், “இது எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமான முடிவு. காரணம், இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் இந்தியத் திரையுலகுக்குப் புதியவையோ, இதற்கு முன்பு வேறு படங்களில் காட்டப்படாதவையோ அல்ல என்பது எனது கருத்து.” என்று பேசினார்.