
ஆஸ்கார் விருது என்பது திரைப்படத்துறையில் வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படுகிறது. இது அமெரிக்க திரைப்பட அகாடமி விருதுகள் (Academy Awards) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படுகிறது. மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.
முதன்முதலாக ஆஸ்கார் விருதுகள் மே 16, 1929-ம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. சினிமா உலகின் உச்ச விருதாக பார்க்கப்படுவது, ஆஸ்கார் விருதுகள்தான். ஆஸ்கார் விருது பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு சினிமா கலைஞர்களின் ஏக்கமாகவும் இருக்கும்.
ஆஸ்கார் விருதை வழங்கும் அமைப்பு 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் அண்ட் சயன்ஸ்' (Academy of Motion Picture Arts and Sciences) ஆகும்.
இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த எழுத்து என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லினியர் (Slumdog Millionaire) படத்திற்காக சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய இரண்டு விருதுகளையும் வென்றுள்ளார். மேலும், கார்லா சோபியா காஸ்கான், ஸ்பானிஷ் திரைப்படமான 'எமிலியா பெரெஸ்' படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் திருநங்கையாக உள்ளார்.
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 97-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் மிக்கி மாடிசன் - மார்க் ஈடல்ஷெடைன் நடித்த ‘அனோரா' திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 5 விருதுகளை வென்றது. இதற்கிடையில் 98-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த விழா அடுத்த ஆண்டு (2026) மார்ச் 15-ந்தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 98வது அகாடமி விருதுகளுக்கான வாக்களிப்பு மற்றும் தகுதி வழிகாட்டுதல்களில் முக்கிய மாற்றங்களை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டுள்ளது.
அகாடமி உறுப்பினர்களுக்கான கட்டாயப் பார்வைத் தேவை முக்கிய புதுப்பிப்புகளில் ஒன்றாகும். இறுதி ஆஸ்கார் சுற்றில் வாக்களிக்க, வாக்காளர்கள் இப்போது ஒவ்வொரு பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து படங்களையும் பார்க்க வேண்டும். அதேபோல் நடிகர் தேர்வில் சாதனை என்ற புதிய ஆஸ்கார் பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.