Others movie
Others movie

விமர்சனம்: 'Others' - யார் இந்த மற்றவர்கள் - பதில் கிடைத்ததா?

Published on
ரேட்டிங்(3 / 5)

அபின் ஹரி ஹரன் இயக்கத்தில் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் Others. சென்னை புறநகரில் ஒரு வேன் கவிழ்ந்து தீப்பிடித்து எரிகிறது. இந்த விபத்தில் இறந்தவர்களில் மூன்று பேர் பெண்கள் என்றும் இந்த மூன்று பெண்களுக்கும் கண் பார்வை இல்லை என வழக்கை விசாரிக்கும் ஹீரோ ஆதித்யா மாதவன் கண்டு பிடிக்கிறார். இந்த பெண்கள் தங்கியிருந்த ஆசிரமத்திற்கு சென்று விசாரணை செய்கிறார். இவர் விசாரணை செய்ய போகும் இடத்தின் நிர்வாகி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இந்த கொலைகளுக்கு யார் காரணம்? முடிவு என்ன? என்று தெரியமால் குழம்புகிறது காவல் துறை. விழும் முடிச்சுக்களை கழற்ற முடிந்ததா என்று விடை சொல்கிறது Others.

படத்தின் முதல் பாதி பரபரப்பான காட்சிகளுடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில் சுவாரசியம் குறையாமல் தான் இருக்கிறது. ஆனால் கிளைமாக்ஸ் நெருங்க, நெருங்க கிரைம் திரில்லர்க்கான சுவாரசியம் குறைந்து விடுகிறது. இருந்தாலும் பரவாயில்லை, கிளைமாக்ஸ் காட்சியில் செண்டிமெண்ட் தந்து குறையை சரி செய்து விடுகிறார் டைரக்டர். நாம் இது வரை யோசிக்காத மக்களை பற்றி யோசித்து இருக்கிறார் இயக்குனர். பிறக்கும்போது ஆணாக பிறந்து ஹார்மோன் மாற்றத்தால் திருநங்கைகளாக மாறுபவர்களை பற்றிய படங்கள் தமிழில் வந்துள்ளன. ஆனால் பிறக்கும் போது பெண்ணாக பிறந்து ஹார்மோன் மாற்றத்தால் ஆணாக மாறிய திருநம்பிகளைப் பற்றிய படங்கள் தமிழில் மிகக் குறைவு. திருநம்பிகளை பற்றி இந்த Others படத்தில் பேசியதற்காக படத்தின் இயக்குனரை பாராட்டலாம். திருநம்பிகளின் மீது சமுதாயம் வைத்துள்ள தவறான பார்வையை இப்படம் காட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஆரோமலே - கதைக்கு மேல்...கதைக்கு மேல்...கதை! கதை என்ன?
Others movie

ஆதித்யா மாதவனுக்கு முதல் படம் என்று தெரியாத அளவில் இவர் நடிப்பு உள்ளது. ஒரு சரியான இளம் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு பொருந்திப் போகிறார். கௌரி கிஷன் காதலிலும், அஞ்சு குரியன் மிடுக்கிலும் நம்மை கவர்கிறார்கள். இரண்டு ஹீரோயின்களும் சும்மா வந்து விட்டு போகாமல் நடித்து விட்டு போகிறார்கள். நண்டு ஜெகனுக்கு நீண்ட இடைவெளிக்கு பின் திரையில் தோன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். வெவ்வேறு இடங்களில் நடக்கும் கதையை தனது படதொகுப்பால் அழகான நேர்கோட்டில் கொண்டு வந்துள்ளார் எடிட்டர் ராமர். ஜிப்ரானின் இசை சில இடங்களில் சற்று ஓவர் டோஸாக இருக்கிறது. பல இடங்களில் விண்ணப்ப படிவங்களில் பாலினம் என்ற இடத்தில் ஆண் பெண் என்று குறிப்பிட்டு விட்டு பிறகு மற்றவர்கள் அல்லது others என்று குறிப்பிட்டு இருப்பார்கள். நாம் அதிகம் யோசிக்காகத இந்த Others பற்றி இந்த படம் யோசித்திருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com