
இந்த வாரம் வெளியாகி உள்ள பரமசிவன் பாத்திமா, பேரன்பும் பெருங்கோபமும், மெட்ராஸ் மேட்னி இந்த மூன்று படங்களின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
பரமசிவன் பாத்திமா - மத நல்லிணக்கத்தை சொல்லும் படம்: ரேட்டிங் 3/5.
இசக்கி கார் வண்ணன் இயக்கி தயாரித்துள்ள படம் பரமசிவன் பாத்திமா. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் சுப்பிரமணியபுரம், யோக்கோபுரம் என்ற இரண்டு ஊர்கள் உள்ளன. சுப்பிரமணியபுரம் பகுதியில் ஹிந்துக்களும், யோக்கோபுரத்தில் கிறிஸ்துவர்களும் வசிக்கிறார்கள். திருமணத்திற்கு தயாராகும் இரண்டு ஆண்கள் திருமணத்திற்கு முதல் நாள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி இசக்கி கார்வண்ணன் இந்த கொலைக்கு பின்னால் ஒரு வாலிபனும், ஒரு இளம் பெண்ணும் இருப்பதை கண்டு பிடிக்கிறார். இந்த இருவரையும் பற்றி அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன.
படத்தின் முதல் பாதி மர்மமான கொலைகள், விசாரணை என்று பரபரப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதி மதம், மதம் சார்ந்த விஷயங்களை நோக்கி நகர்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி அதிகமாக சிந்திக்க வைக்கிறது. மதம், மதம் பற்றிய வெகுஜன மக்களின் புரிதல் போன்றவைகளை எந்த வித சமரசமும் இல்லாமல் சொல்லி இருப்பதற்காக டைரக்டரை பாராட்டலாம்.
"வெள்ளைக்காரன் இங்க வந்ததே பிச்சை எடுக்க தான்," வீரமாமுனிவர் ஒரு தமிழ் மாணவர்" என்பது போன்ற வசனங்கள் நம் மண் சார்ந்த கலாசாரத்தை பற்றி யோசிக்க வைக்கின்றன. விமல் தனக்கு ஒரு வெற்றி வேண்டும் என்பதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சாமி ஆடும் போது இவரின் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் டைரக்டர் இசக்கி கார் வண்ணனிடம் நடிப்பில் ஒரு மிடுக்கு தெரிகிறது. மலைப் பகுதியில் ஒளிப்பதிவு என்றாலே சுகுமார்க்கு இனிப்பு சாப்பிடுவதை போல. மலை கிராமத்தின் ஒவ்வொரு அழகையும் அழகாக படம் பிடித்திருக்கிறார். சிவன் கோவிலில் வாசிக்க படும் கையிலாய இசையை படத்தில் சிறப்பாக பயன்படுத்தியதற்காக இசையமைப்பாளரை பாராட்டலாம். படத்தில் ஓரிரு குறைகள் இருந்தாலும் நம் மண் சார்ந்த விஷயங்களை பேசியதற்க்காக படத்தை பார்க்கலாம். பரமசிவனும் பாத்திமாவும் மதத்தை விட மனிதம் முக்கியம் என்று சொல்கிறார்கள்.
பேரன்பும் பெருங்கோபமும் - ஜா'தீ'யின் இன்னொரு முகம்: ரேட்டிங் 3/5.
இயக்குனர் தங்கர் பட்சனின் மகன் விஜித் பட்சான் ஹீரோவாக அறிமுகம் ஆகி உள்ள படம் பேரன்பும் பெருங்கோபமும். இப்படத்தை சிவபிரகாஷ் இயக்கி உள்ளார். இந்த உலகில் பல ராஜாக்கள் இருக்கலாம். ஆனால் இசைக்கு எப்போதும் ஒரே ராஜா நம் இளையராஜா தான் என்று தன் இசையால் நிரூபித்து வருகிறார் ராஜா சார். இந்த படத்தில் இடம் பெறும் ஒரு அம்மன் பாடலிலும், இரண்டு காதல் பாடல்களிலும் 1980களில் தான் இசைய மைத்த பாடல்களின் இசையை மீண்டும் படத்தில் நினைவூட்டுகிறார் ராஜா சார்.
ஆவரேஜ் அளவில் இருக்கும் இந்த பட த்தை தனது இசையால் இன்னும் சில படிகள் உயர்த்தி இருக்கிறார் இளையராஜா.
தேனி மாவட்டத் தில் உள்ள ஒரு அரசு மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகள் காணாமல் போகிறார்கள். இதை பற்றி போலீஸ் விசாரித்து இந்த மருத்துவமனையில் பணியாற்றும் விஜித்தை கைது செய்கிறது. விஜித் ஏன் இப்படி செய்தார் என்று சொல்கிறது பிளாஷ் பேக். ஜாதி என்ற மனநிலை பிறப்பால் வருவது கிடையாது.
வளரும் போது ஊட்டப்படுவது என்று சொல்கிறது இந்த படம். படத்தின் முதல் பாதி பெரிய அளவில் நம்மை கவரவில்லை. ஆனால் இரண்டாம் பாதி ஓரளவு ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் பேசுப்படும் வசனங்கள் சாட்டையடியாக இருக்கிறது. அறிமுக நாயகன் விஜித் அமைதியாக நன்றாக நடிக்கிறார். இவர் தாடியுடன் நடிப்பதை பார்க்கும் போது 'கற்றுது தமிழ்' படத்தில் ஜீவா நடிப்பை நினைவு படுத்துகிறது. பேரன்பும் பெருங்கோபமும் ஓரளவு ரசிக்க வைக்கிறது.
மெட்ராஸ் மேட்னி - வெரி சுமார்: ரேட்டிங் 2/5.
கார்த்திகேயன் மணி மெட்ராஸ் மேட்னி படத்தை இயக்கி உள்ளார். சென்னை வாழ் நடுத்தர மக்களின் வாழ்கையை படமாக எடுக்க விரும்பும் சத்யராஜ், ஒயின் ஷாப்பில் குடித்து கொண்டு இருக்கும் காளி வெங்கட்டிடம் அவரது வாழ்க்கையை கேட்கிறார். காளி ஆட்டோ ஓட்டும் ஒரு நபர். கஷ்ட்ட பட்டு மகளை படிக்க வைத்து பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்புகிறார். மகன் ப்ளஸ்டு முடித்து விட்டு கல்லூரியில் சேர காத்து கொண்டுள்ளார். பெங்களூரில் உள்ள ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்கிறார் மகள். ஆனால் இவரின் ஜாதியால் திருமணம் நின்று விடுகிறது.
மீண்டும் சென்னைக்கு வந்து அப்பா காளி வெங்கட்டை சந்தித்து விட்டு வேலைக்காக அமெரிக்கா செல்கிறார் மகள். மகன் கல்லூரி சென்று படிக்கிறார். காளி வெங்கட் தொடர்ந்து படிக்க சென்று விடுகிறார். சரி நீங்க சொன்னதில் கதை எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? படத்தில் கதை ஒன்று இல்லவே இல்லை. மேலே சொன்ன சம்பவங்கள் மட்டுமே இருக்கின்றன. மிடில் கிளாஸ் படும் கஷ்டத்தை மட்டும் சொல்லிக்கொண்டே போனால் மட்டும் போதுமா? கதை வேண்டாமா?
ஒரு காட்சியில் காளியின் மகன் மின்சார அலுவலகம் சென்று அங்கே உள்ள அதிகாரியிடம் தகராறு செய்கிறார். இந்த சம்பவமே கதையாக மாறும் என்று எதிர்பார்த்தால் இதுவும் மாறவில்லை. காளி வெங்கட், ரோஷினி இருவரின் நடிப்பு, பின்னணி இசை போன்ற விஷயங்கள் நன்றாக இருந்தும் கதை என்ற நூலில் கோர்க்காததால் படம் ரசிக்கும் படியாக இல்லை. மொத்தத்தில் பரமசிவன் பாத்திமா - சூப்பர், பேரன்பும் பெருங்கோபமும் - ஆவரேஜ் மெட்ராஸ் மேட்னி - வெரி சுமார்.