விமர்சனம்: பறந்து போ - குழந்தைகளுக்கு பிடிக்கும்; பெற்றோர்களை யோசிக்க வைக்கும்!

ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள பறந்து போ படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
parandhu po movie
Parandhu po movie
Published on

பறந்து போ - மனம் குழந்தையாக மாறி பறக்கிறது - ரேட்டிங் 3.5/5

எப்போதும் ஆன்லைன் வகுப்புகள், போன் என்று இருக்கும் குழந்தைகளை வெளியே அழைத்து சென்று மலை, காடு, நதி என்று காண்பித்தால் அவர்கள் எப்படி குதூகலம் அடைவார்கள் என்று சொல்லும் படம் 'பறந்து போ'. கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கிய ராம் இப்படத்தை இயக்கி உள்ளார்.

கோகுலும் (மிர்ச்சி சிவா) இவரது மனைவியும் வேலைக்கு செல்பவர்கள். இவரது எட்டு வயது மகன் அன்பு எப்போதும் வீடியோ கேம்ஸ், போன் என்று இருப்பவன். கோகுல் தன் மகனுடன் பைக்கில் வெளியில் செல்லும் போது எதிர்பாராத விதமாக கடன் வாங்கிய ஒருவரிடம் மாட்டி கொள்கிறார். கடங்காரனிடம் இருந்து தப்பிக்க பைக்கில் மகனுடன் நெடுந்தொலைவு சென்று விடுகிறார்.

இப்படி செல்லும் போது, தனது தாய் தந்தை, முன்னாள் காதலி, மகனின் வகுப்பு தோழியின் குடும்பம், வாத்து மேய்ப்பவர் என பல மனிதர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது நடக்கும் உணர்வு களை 'ஒரு பயண வழி அனுபவமாக' தந்திருக்கிறார் ராம்.

இந்த படத்தில் பெரிய அளவில் கதை, பரபரப்பாக நகரும் திரைக்கதை இல்லை. என்னுடன் வாருங்கள் என்று இந்த பயணத்தின் வழியே ஒரு உலகத்தை காட்டி உள்ளார் ராம். பயணத்தின் வழியே சந்திக்கும் கதை மாந்தர்கள் சுவாரசியம். குறிப்பாக தனது காதலி அஞ்சலியை, கோகுல் பார்க்கும் போது , அங்கே பகிரப்படும் பழைய நினைவுகள், அஞ்சலி தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைக்கும் விதம் போன்ற இடங்கள் நன்றாக உள்ளது. தனக்கு சூரியகாந்தி பூவை பரிசளிக்கும் சிவாவை பார்த்து "நான் அஞ்சாவது படிக்கும் போது சூரியகாந்தி பூ கேட்டேன், இப்போ என் பையன் அஞ்சாவது படிக்கும் போது கொண்டு வந்து கொடுக்கிற" என்று சொல்லும் இடம் பார்வையாளர்கள் பலருக்கு பழைய காதல் நினைவுகளை மனதில் கொண்டு வருகிறது.

அன்பு, வாத்து மேய்து முட்டையை கூலியாக பெற்று கொள்ளும் இடம் மிக நன்றாக இருக்கிறது. அன்புவாக நடிக்கும் மாஸ்டர் மிதுல் தனது குறும்புத்தனமான நடிப்பில் இன்றைய சிறுவர்களை நினைவு படுத்துகிறார். ஆன்லைன் வகுப்பில் இவர் அடிக்கும் லூட்டி நம் வீட்டில் உள்ள சுட்டி சிறுவனை பார்ப்பது போலவே உள்ளது. அஞ்சலி சில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் வழக்கம் போல மனதில் நிற்கிறார். மிர்ச்சி சிவாவுக்கு இது கண்டிப்பாக வித்தியாசமான படம் தான். மற்ற படங்களில் நடிப்பதை போல தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார். டைரக்டர் ராம் செய்த 'மேஜிக்கால்' சிவாவின் நடிப்பு ஒரு படி உயர்ந்து தெரிகிறது. அன்பின் அம்மாவாக நடிக்கும் கிரேஸ் ஆண்டனி ஒரு சராசரி வேலைக்கு போகும் குடும்ப தலைவியின் உணர்வுகளை நடிப்பில் கடத்தி விடுகிறார்.

இதையும் படியுங்கள்:
F1: The Movie - விமர்சனம் - வேகம் வேகம் வேகம்... வெற்றி!
parandhu po movie

விஜய் யேசுதாசின் குரலில் இரண்டு பாடல்கள் நன்றாக வந்துள்ளது.

"பயணம் செய்யுங்கள். உங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு பயணம் செய்யுங்கள். டிஜிட்டல் உலகத்தை தாண்டி வெளி உலகம் மிக பெரிது, அழகானது என்று புரிய வையுங்கள்" என்று சொல்கிறது பறந்து போ. படம் பார்க்கும் நம் மனமும் பறக்கிறது.

இந்த படம் குழந்தைகளுக்கு பிடிக்கும். பெற்றோர்களை யோசிக்க வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com