
"ஒரு கட்டத்தில் நான் என்ன வேகத்துல போறேன்னு தெரியாது. சுத்தி இருக்கிற மக்கள் கூட்டம் தெரியாது. ரோடு தெரியாது. நானும் காரும் மட்டும் தான். எல்லா இடத்திலும் அமைதி. அந்த நேரம் நான் கார் ஓட்ட மாட்டேன். பறப்பேன். இது கனவு மட்டுமில்லை. ஒரு நாள் நடக்கப்போற உண்மை."
தனது கார் ஓட்டும் கனவு குறித்து நாயகன் சன்னி (பிராட் பிட்) சொல்லும் ஒரு வசனம் இது. F1 படத்தின் முழுக் கதையும் இதைச் சுற்றியது தான். இதைப்பற்றியது தான்.
ஒரு காலத்தில் மிகப்பெரிய ரேஸராக இருந்தவர் பிராட் பிட். அதை விட்டு விலகி சிறிய அளவு பந்தயங்களில் கலந்து கொண்டு கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.
தனது நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ஒரே ஒரு பார்முலா ஒன் பந்தயமாவது வெல்ல வேண்டும். இல்லை விட்டுப் போய்விடும் என்று இருப்பவர் ரூபன் (ஜேவியர் பார்டெம்).
இவர்கள் இருவரும் மச்சி மாமா நண்பர்கள். (டப்பிங் படமென்றால் அப்படித்தானே). தன்னையும் தனது நிறுவனத்தையும் காப்பாற்றச் சன்னியிடம் உதவி கேட்கிறார் ரூபென்.
ஒரு காலத்தில் மிகப்பெரிய ஓட்டுநராக இருந்தாலும் வயதாகி விட்டதால் அவர் மேல் யாருக்கும் நம்பிக்கை இல்லை. அந்த அணியில் ஏற்கனவே நட்சத்திர டிரைவராக இருக்கும் ஜோஷுவாவிற்கும் (இட்ரிஸ்) இவருக்கும் முட்டிக் கொள்கிறது. இவர்கள் ஈகோ சண்டையை மீறி இந்த அணி வென்றதா என்பது தான் கதை.
முழுவதும் பார்முலா ஒன் பந்தயங்கள் பற்றிய படம் என்பதால் இது அதைப் பற்றித் தெரியாதவர்களை எந்த அளவு ஈர்க்கும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. உள்ளே சென்று அமர்ந்தது தான் தாமதம். பார்வையாளர்கள் திரையரங்கில் அமரவில்லை. திரையில் ஓடும் கார் இருக்கையில் அமர வைத்து விடுகிறார்கள். விதவிதமான நாடுகள். கார்பந்தய ட்ராக்குகள். அதிவேகமாகப் பறக்கும் கார்கள். மெர்சிடிஸ், மெக்லாரன், பெராரி, ரெட் புல் என கார்கள்.
இயக்குனர் ஜோசெப் கோசின்ஸ்கி பார்வையாளர்கள் அனைவரையும் பங்கேற்பாளர்களாக மாற்றி விடுகிறார். திருப்பங்கள், பிரேக்குகள், டயர் மாற்றங்கள், விபத்துகள் அனைத்தையும் உணர முடிகிறது. முதல் பத்தியில் சொன்ன அந்த பறக்கும் உணர்வு. அதைக் கடத்துவதில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், எடிட்டர் அனைவரும் கை கோர்த்து அமர்க்களப்படுத்தி இருக்கின்றனர்.
நாயகன் வந்துவிட்டால் அனைத்துப் பந்தயங்களும் வெற்றி தான் என்று இவர்கள் காட்ட முற்படவே இல்லை. கலந்து கொள்ளும் அனைத்து போட்டிகளிலும் தோல்வி. விபத்துகள். திட்டமிடலில் குளறுபடிகள். புதிய வியூகம். புதிய வேகம். வண்டிகளுக்கு புதிய பாகங்கள் என முயன்று கொண்டே இருக்கிறார்கள்.
"ஒரு ரேஸிங் அணியின் டெக்னிகல் டைரக்டர் ஒரு பெண்ணா என்று என்னைப் பார்த்துக் கேள்வி கேட்பவர்கள், கேட்டவர்கள் தான் அதிகம். இது ஆண்கள் மட்டும் சம்பந்தப்பட்டிருக்கும் போட்டியல்ல. பார்முலா 1 என்பது ஒரு தனி நபர் போட்டியல்ல. இது ஒரு கூட்டு முயற்சி (Team effort). இதை உணராதவர்கள் வெற்றி பெறவே முடியாது" என்று சொல்லும் கேட் என்ற ஒரு பாத்திரத்தில் கெர்ரி காண்டோன்.
என்ன தான் தோற்றாலும், நட்பு மாறாமல் கடைசி வரை இயல்பாகத் தொடரும் பிராட் பிட், ஜேவியர் பாத்திரங்கள் பார்க்க அவ்வளவு அழகு. தமிழ் டப்பிங்கில் பார்த்ததால் அவர்கள் மச்சி மாமா என்று பேசிக்கொள்வது கூட இயல்பாகத்தான் இருந்தது. இட்ரிஸ் அம்மாவாக வரும் சாரா நைல்ஸ் கண்டிப்பான அதே சமயம் லட்சியத்திற்குத் துணை நிற்கும் அவர் நடிப்பும் கச்சிதம்.
'ரேஸ் பற்றிய படங்கள் எனக்குப் பிடிக்காது. பார்முலா 1 நான் பார்த்ததே இல்லை. சும்மா வேகமாகக் கார் ஓட்டப் போகிறார்கள் இதில் வேறு என்ன இருக்கப் போகிறது?' என்று நினைத்து இந்தப் படத்தைத் தவற விட்டு விடாதீர்கள்.
ஸ்பீட் போல, பாஸ்ட் அண்ட் பியூரியஸ் போல ஜிகினாத் தனங்களை நம்பி எடுக்கப்பட்ட படமல்ல இது. இதன் பின்னால் ஒரு மிகப் பெரிய உழைப்பு இருக்கிறது.
மிகப் பெரிய பார்முலா ஒன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் இந்தக் கதையில் ஒரு பங்கு வகித்திருக்கிறார் என்றால் இந்த அணியின் அர்ப்பணிப்பைப் புரிந்து கொள்ளலாம். இது காட்சிகளின் நம்பகத் தன்மைக்கு ஒரு சான்று. பல காட்சிகள் உண்மையான கார் பந்தயங்களில் எடுக்கப்பட்டவை. பந்தயங்கள் நடக்காத சமயங்களில் அந்த டிராக்குகளில் படம் பிடித்திருக்கிறார்கள்.
அந்த விதத்தில் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பார்முலா 1 பந்தயங்களைப் பார்க்கும் ஆவல் நமக்கு அதிகரிக்கும் என்பது உண்மை. அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இந்தப் படம் வேற லெவல். புதிதாகப் பார்ப்பவர்களுக்கு F1 ஒரு தவறவிடக்கூடாத திரையரங்கு அனுபவம்.