விமர்சனம்: பராசக்தி - சொல்ல நினைத்தது பலம்; சொன்ன விதம் பலவீனம்!
ரேட்டிங்(3 / 5)
பல பிரச்னைகளை கடந்து, சென்சார் 'க்ரீன் சிக்னல்' தந்த பிறகு, திரைக்கு வந்துள்ளது பராசக்தி (Parasakthi) திரைப்படம். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி எப்படி உள்ளது?
படம் 1959 ல் தொடங்குகிறது. கல்லூரி மாணவராக இருக்கும் சிவகார்த்திகேயன் புறநானூறு என்ற ஹிந்தி எதிர்ப்பு அமைப்பை நடத்துகிறார். அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு ரயிலை கொளுத்தி விடுகிறார். எதிர்பாராத விதமாக இந்த கலவரத்தில் சிவகார்த்திகேயன் நண்பர் இறந்து விடுகிறார். இதனால் மனமுடைந்த சிவகார்த்திகேயன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்து இஞ்சின் டிரைவராக இருக்கிறார்.
சில ஆண்டுகள் கழித்து தன் தம்பி அதர்வா ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்வதை பார்க்கிறார். தம்பி போராட்டத்தின் போது போலீஸ் காரர்களால் கொல்லப்பட்டு விட, மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்து ஹிந்தி திணிப்பை எதிர்க்கிறார். ஒரு கட்டத்தில் அரசு சிவகார்த்திக்கியணை சுட்டு கொல்ல முயற்சி செய்கிறது. இறுதியில் என்ன ஆனது? என்று சொல்கிறது இந்த பராசக்தி.
ஹிந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியை பிடித்த திராவிட இயக்கங்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆண்டு வருகின்றன. இந்த அறுபதாண்டுகளில் தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பை பற்றி எந்த படங்களும் வந்ததில்லை. முதல் முறையாக இப்படி ஒரு முயற்சி செய்ததற்கு சுதா கொங்கராவை பாராட்டலாம்.
படத்தின் முதல் பாதியில் பெரிய திருப்பங்கள் இல்லை. ஆனால், இரண்டாம் பாதி மிக எமோஷனலாக, பரபரப்புடன் நகர்வது சிறப்பாக இருக்கிறது.
"எரித்தது நான் இல்லை, ஆனால் செய்தது என் தம்பி தான்" என அண்ணாதுரை கேரக்டரில் வரும் சேத்தன் சொல்வது, "நாங்க சொல்றது யூனிட்டி, நீங்க சொல்றது யூனிபாமிட்டி" என்று ஹிந்தி திணிப்பை பிரதமர் இந்திரா காந்தியிடம் சிவகார்த்திகேயன் சொல்லுவது, போன்ற வசனங்கள் சபாஷ் போட வைக்கிறது.
வில்லனாக ரவி மோகன் மிரட்டி விட்டார். அமைதியும், கொடூரமும் கலந்த வில்லனாக தமிழ் சினிமாவிற்கு ஒரு புது வில்லன் கிடைத்து விட்டார் என்று சொல்லலாம்.
மற்ற ஹீரோயின்களை போல் சும்மா வந்து போவாரோ என்று நீங்க நினைத்தால் அது தவறு என்று சொல்வதை போல் ஸ்ரீ லீலாவின் நடிப்பு கிளைமாக்ஸ் காட்சியில் சூப்பராக இருக்கிறது.
ஜி.வி இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக இருந்தாலும் தெலுங்கு மொழியில் தொடங்கும் பாடல் மிகவும் 'காதலுடன்' இருக்கிறது.
பழைய நீராவி ரயிலை உருவாக்கிய விதத்தில் ஆர்ட் டைரக்டர் தனித்துவமாக தெரிகிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு சிறப்பு. காதல் காட்சிகளை உருவாக்கிய விதத்தில் மணிரத்னம் படம் நினைவுக்கு வருகிறது.
1969 க்கு முன்னர் மதுரையில் பெரியார் நிலையம் இல்லை. ஆனால் பேருந்தில் பெரியார் நிலையம் என்று காட்டுகிறார்கள். எப்படி சாத்தியம்? இப்படி சில பல லாஜிக் மீறல்கள் இல்லாமல் இல்லை.
படத்தில் மொழி போராட்டத்திற்கு தமிழர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மொழி காரர்களும் இணைகிறார்கள். ஹிந்தி எதிர்ப்பு கால கட்டத்தில் இப்படி நடந்தற்கு ஆதாரம் இல்லை. ஆனால் சுதா கொங்காரா இன்றைய மத்திய அரசின் சில செயல்பாடுகளை மனதில் வைத்து, இனி மொழி திணிப்பு நடந்தால் இப்படி நடக்கும் என்று சொல்லாமல் சொல்கிறாரா? இதற்காகத்தான் மத்திய அரசின் தணிக்கை குழு படத்தை வெளியிட தயக்கம் காட்டியதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பராசக்தி - வராலாற்றை பதிவு செய்யும் ஒரு முயற்சி!

