

இது ஒரு உண்மைச் சம்பவம்.
சாண்டோ சின்னப்பா தேவர் 1960களின் இறுதியிலோ அல்லது 1970களில் ஆரம்பத்திலோ ஒரு சாமி படம் எடுத்தார். சாண்டோ சின்னப்பா தேவரின் பிரியமான கடவுள் முருகன் என்பதை அனைவரும் அறிந்ததே. படத்தில் நாயகி நாத்திகவாதி. நாயகன் ஆன்மிகவாதி. தீவிர முருக பக்தன். க்ளைமாக்ஸ் மட்டுமே எடுக்க வேண்டும்.
கதைப்படி குழந்தையை (நாயகனின் மகன்) நோக்கி பாம்பு தீண்ட வந்துபோது ஒரு மயில் கவ்விக்கொண்டு போக வேண்டும். இதற்காக 4 மயில்களுக்கு பயிற்சி கொடுத்து கூட்டி வந்தார்கள்.
காலையில் ஷூட்டிங் ஆரம்பித்தது. 4 மயில்களும் சொதப்பின. கேமராவை நோக்கிக்கூட வரவில்லை. அங்கும் இங்கும் பறந்துவிட்டன.
கேமராமேன் மற்றும் பல தொழில் நிபுணர்கள் ‘இன்று வேண்டாம். மீண்டும் பயிற்சி கொடுத்து வந்து எடுப்போம்’ என்றனர். சாண்டோ சின்னப்பா தேவர் ஒப்புக்கொள்ளவில்லை. அந்தி மாலை நெருங்கிவிட்டது. மீண்டும் எல்லோரும் பிறகு எடுப்போம் என்றனர்.
சாண்டோ சின்னப்பா தேவரின் முடிவோ வேறாக… இன்றே எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு பாறையில் தனியாக உட்கார்ந்து முருகனிடம் பேசினார்.
‘அப்பனே… உன்னை வைத்துத்தான் இந்தப் படம் எடுக்கிறேன். என் சிரமம் உனக்குத் தெரியாதா? நீ நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாயே..? இது நியாயமா… ?’ என்று மனம் உருகிப் பேசினார்.
கேமரா தயார் நிலையில் இருந்தது. கோபுரத்தில் இருந்து ஒரு வண்ண மயில் பறந்து வந்து பாம்பைக் கவ்வியது. க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. பாம்பைக் கவ்விய மயில், பயிற்சி பெற்ற நான்கு மயில்களில் ஒன்று இல்லை. வேறு ஏதோ ஒரு மயில் வந்து பாம்பைக் கவ்வியது.
சாண்டோ சின்னப்பா தேவரின் குரல் கணீர் என ஒலித்தது.
“முருகா…என் அப்பன்… ! கடைசி நிமிடத்தில் வந்த ஆபத்பாந்தவன் நீயே… !” என்று கண்ணீர் மல்க அழுது கும்பிட்டார்.
படக் குழுவிற்கு ஒரே ஆச்சரியம். பயிற்சி கொடுத்த 4 மயில்களும் சொதப்பி, நிலைமை இப்படி மோசமாக இருக்கும்போது, எங்கே இருந்து வந்தது இந்த மயில்?
சாண்டோ சின்னப்பா தேவரின் பக்தி எல்லோருக்கும் நன்கு தெரிந்தது. முழுக்க முழுக்க முருகன் அருள் பெற்றவர் இவர் என்று புரிந்துகொண்டு பிரம்மித்து போனார்கள்.
அந்தப் படம் ‘துணைவன்’.
சாண்டோ சின்னப்பா தேவரின் திறமை உலகே அறிந்தது. எல்லா மிருகங்களையும் நடிக்க வைத்து உள்ளார். இது தெய்வீகச் சக்தி இல்லாமல் சாதிக்க முடியாது.
‘நல்ல நேரம்.’ எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தார். 4 யானைகள்.
யானைகள் தூள் கிளப்பின. பெரும் வெற்றி பெற்ற படம்.
பாம்பைக்கூட நடிக்க வைத்து உள்ளார். படம் ‘வெள்ளிகிழமை விரதம்’.
‘ஆட்டுக்கார அலமேலு’வில் ஒரு ஆட்டைப் பிரமாதமாக நடிக்க வைத்தார். இது மாபெரும் வெற்றி படம். ஆடு ஒரு கலக்கு கலக்கிவிட்டது.
சாண்டோ சின்னப்பா தயாரித்த படங்கள் வெற்றிபெற்றவுடன் அதன் லாபத்தின் ஒரு பகுதியை மருதமலையில் படியேறும் படிக்கட்டு வசதிகள் மற்றும் பல திருப்பணிகளால் மருதமலை உலகப் புகழ் பெற்றது. முருகனுக்கு ‘தங்க வேல்’ காணிக்கையாகக் கொடுத்தார்.
சினிமா உலகில் சாண்டோ சின்னப்பா தேவர் ஒரு முருக பக்தனாக வந்து இந்த உலகைக் கவர்ந்தார்.