விமர்சனம்: 'பேச்சி' படுத்தும் பாடு... சக்கை போடு! (இங்கே திகிலுக்கு பஞ்சமில்லை)
ரேட்டிங்(4 / 5)
ஒரு படம் மக்களிடம் சென்றடைய, அது, பிரமாண்ட பட்ஜெட் படமாக இருக்க வேண்டும் என்பதில்லை. பெரிய ஸ்டார் நடிகர்கள் கூட நடிக்க வேண்டியதில்லை. ஒரு நல்ல திரைக்கதையுடன் இருந்தால் போதும் நம் தமிழ் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதற்கு உதாரணமாக சில படங்கள் வெளிவருகின்றன. இது போன்ற நல்ல திரைக்கதையுடன் ஒரு சிறந்த ஹாரர் ( பேய் - அமானுஷ்யம்) படமாக வந்துள்ளது பேச்சி.
ஒரு படம் ஆரம்பித்த முதல் பதினைந்து நிமிடங்களில் இந்த படம் என்ன விஷயத்தை சொல்ல போகிறது என்பதை சொல்லி விட வேண்டும். ரசிகர்களின் பார்வையை திரையின் மீது கொண்டு சென்று விட வேண்டும் என்பதை நல்ல சினிமாவுக்கு இலக்கணமாக சொல்வார்கள் ஹாலிவுட்காரர்கள். இந்த விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றி இருக்கிறார் பேச்சி படத்தின் டைரக்டர் ராமசந்திரன்.
முதல் காட்சியில் அடர்ந்த காட்டுக்குள் செல்லும் இளம் காதலர்கள் சந்திக்கும் அமானுஷ்ய அம்சங்களிலேயே நாம் படத்திற்குள் வந்து விடுகிறோம். இரண்டு மணி நேரம் கொண்ட இந்த பேச்சி படத்தில் இரண்டு நிமிடங்கள் கூட ரசிகர்கள் பார்வையை திரையை விட்டு எடுக்க முடியாத அளவுக்கு காட்சிகள் உள்ளன.
படத்தின் ஆரம்பத்தில் இது "இப்படம், நான் பார்த்த பல படங்கள், படித்த அமானுஷ்ய விஷயங்களின் பாதிப்புதான்" என பெருந்தன்மையுடன் டைட்டில் கார்டில் ஒப்பு கொண்டு விடுகிறார்.
கொல்லி மலை வனப்பகுதியில் வன அலுவலக கடை நிலை ஊழியராக பணி செய்பவர் பால சரவணன். கொல்லி மலைக்கு வரும் பயணிகளுக்கு சிலருக்கு கைடாகவும் இருக்கிறார். நண்பர்களாக இருக்கும் ஐந்து பேரை வனப்பகுதிக்கு அழைத்துச் செல்கிறார் பால சரவணன். காட்டுக்குள் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல வேண்டாம் என உத்தரவு போடுகிறார். இருந்தாலும் இந்த ஐவரும் இவரின் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்கிறார்கள் பல்வேறு திகில் அனுபவத்தை பெறுகிறார்கள். இருவர் காணாமல் போகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பேச்சிதான் என்கிறார் பால சரவணன்.
பேச்சி யார் இவள் இவர்களை என்ன செய்தாள் என அதீத பயமுறுத்தலுடன் செல்கிறது கதை. இது போன்ற ஒன் லைனில் கதைகள் வந்திருந்தாலும், படம் காட்சிப்படுத்த பட்ட விதத்தில் நமக்கு திகில் உணர்வு கிடைக்கிறது. காட்டிலுள்ள மரங்களும், கொண்டை ஊசி வளைவில் மலையை காட்டும் போதும் நம்மை அறியாமல் பயம் வருகிறது.
எடிட்டர், கேமரா மேன், இசையமைப்பாளர் மூவரும் ஒரு படத்தின் மூம்மூர்த்திகள் என்று சொல்லலாம். பார்த்திபன் (ஒளிப்பதிவாளர்), இக்னாடிஸ் அஸ்வின் (எடிட்டர்), ராஜேஷ் முருகேசன் (இசை) இந்த மும்மூர்த்திகளும் தங்களது பங்களிப்பால் இதை சிறந்த ஹாரர் படமாக உருவாக்கி உள்ளார்கள்.
படத்தில் ஒரு காட்சியில் யார் பேய், யார் மனிதர் என்ற குழப்பம் வருகிறது. இந்த காட்சியில் பயத்துடன் நம்மை அறியாமல் கை தட்டுகிறோம். படத்தின் முதல் காட்சி தவிர மற்ற அனைத்து காட்சிகளும் பகல் நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளன. அதிக காட்சிகள் பகல் நேரத்தில் படமாக்கப்பட்ட பேய் படம் பேச்சியாகத்தான் இருக்கும்.
பால சரவணனும், காயத்ரியும் நாம் எதிர்பார்க்காத அளவில் மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த ஹாரர் பட வரிசையில் 'பேச்சி'க்கு இடம் உண்டு. இந்த பேச்சி, அரண்மனை, காஞ்சனா போன்ற அமானுஷ்ய படங்களுக்கு சரியான போட்டியாக நிற்கிறாள் என்றால் மிகையாகாது. முக்கியமான ஒரு விஷயம்... இருதய பலவீனமானவர்கள் இந்த படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்.