தமிழ் சினிமாவில் நல்ல படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் ஜெயம் ரவி. இவரது முதல் படமான ஜெயம், தெலுங்கு படத்தின் ரீ-மேக் தான் என்றாலும், முதல் படத்திலேயே காதல் நாயகனாக வெற்றியைப் பதிவு செய்திருந்தார். ஒவ்வொரு கதாநாயகனுக்கும் தனது சினிமா பயணத்தில் ஏதாவது ஒரு படம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அவ்வகையில் ஜெயம் ரவியின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் எது தெரியுமா? அப்படம் இவருக்கு எந்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது என்பதையும் இப்போது தெரிந்து கொள்வோம்.
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ரவி, தனது நடிப்பின் மூலம் மிக விரைவிலேயே முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்து விட்டார். M.குமரன் s/o மகாலட்சுமி, மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், அடங்க மறு, மிருதன், கோமாளி மற்றும் பூமி உள்ளிட்ட பல திரைப்படங்கள் இவரது சினிமா பயணத்தில் வெற்றிப் படங்களாக அமைந்தன. இருப்பினும் கோமாளி படத்திற்கு பிறகு சமீபத்தில் இவரது படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியைப் பெறவில்லை.
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுத் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இவர் இராஜராஜ சோழன் கதாப்பாத்திரத்திற்கு மிகச் சரியாக பொருந்தியிருந்தார். இருப்பினும் முதல் பாகம் ஈட்டிய வசூலை விடவும், இரண்டாம் பாகத்தின் வசூல் சற்று குறைவு தான். இந்நிலையில் தான் நடித்த படங்களில், ஒரு படம் மட்டும் என்னை எனக்கே புதியதாய் உணர்த்தியது என்று ஜெயம் ரவி சமீபத்தில் தெரிவித்திருந்தார். பலரும் அது பொன்னியின் செல்வன் படமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஏனெனில் வரலாற்றுக் காவியத்தில் புதியதொரு பரிணாமத்தில் அவர் நடித்திருந்தார். இருப்பினும் இப்படத்தை விடவும் வேறொரு மெகா ஹிட் படத்தைத் தான் ரவி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெயம் ரவி மேலும் கூறுகையில், “என்னுடைய சினிமா பயணத்தில் பேராண்மை திரைப்படம் மிகவும் சிறப்பானது. என்னை எனக்கே புதிதாய் காட்டிய திரைப்படம் என்றால் அது பேராண்மை தான். நம்மால் இதைச் செய்ய முடியும்; சினிமாவில் இன்னும் நான் சாதிக்க வேண்டியது அதிகம் என்று உணர்த்தியதும் இப்படம் தான். இப்படத்தின் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் சார் தற்போது நம்முடன் இல்லையென்றாலும், பேராண்மை படத்தின் மூலமாக இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்” என அவர் கூறினார்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பேராண்மை. ஆனால், திரையில் வெளியான பிறகு மக்கள் இப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். வித்யாசாகர் இசையில், எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, சிறப்பாக நடித்திருந்தார். ஜெயம் ரவி வளர்ந்து வரும் காலகட்டத்தில் இத்திரைப்படம் அவருக்கும் மிகப்பெரும் வெற்றியைத் தேடித்தந்தது.