
தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்தவர் ராகவா லாரன்ஸ். சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான இவர் முனி மற்றும் காஞ்சனா போன்ற திகிலூட்டும் பேய்த் திரைப்படங்களின் மூலம் சினிமாவில் மிகவும் பிரபலமானார். இவர் இன்று சினிமாவில் ஒரு நல்ல நிலையில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணமே ஒரு மாஸ் நடிகர் தான். யார் அந்த நடிகர்? ராகவா லாரன்ஸ்-க்கு அவர் அப்படி என்ன செய்தார் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழில் கதாநாயகனாக அறிமுகமான காலத்தில் பாண்டி, அற்புதம், ராஜாதி ராஜா மற்றும் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார் ராகவா லாரன்ஸ். பிறகு இவரே இயக்குநராக முனி மற்றும் காஞ்சனா படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி, நடிக்கவும் செய்தார். மேலும் மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா, சந்திரமுகி 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ருத்ரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் முதலில் தெலுங்கு படத்தில் தான் நடன இயக்குநராக பணிபுரிந்தார். பிறகு தமிழ்ப் படங்களிலும் நடன இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒருமுறை தல அஜித்தின் 25வது படமான அமர்க்களம் திரைப்படத்தில் நடன இயக்குநராக பணிபுரிந்த போது தான், இவருக்கான சினிமா கதவு முழுமையாக திறந்தது. கடந்த 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியான அமர்க்களம் திரைப்படத்தில் வரும் மகா கணபதி பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்தப் பாட்டின் மூலமாகவே ராகவா லாரன்ஸ் சினிமாவுக்குள் நுழைந்தார் என்றே சொல்ல வேண்டும்.
மகா கணபதி பாடல் குறித்து சமீபத்தில் மனம் திறந்த ராகவா லாரன்ஸ், “மகா கணபதி பாடலுக்கு முதலில் நடிகர் அஜித் தான் நடனம் ஆட வேண்டும் என்றிருந்தது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் ஆடுவதைப் பார்த்து, இந்தத் தம்பி நன்றாக நடனம் ஆடுகிறாரே! இவரே இந்தப் பாடல் முழுவதும் நடனம் ஆடட்டும் என நடிகர் அஜித் கூறினார். அஜித் சார் நினைத்திருந்தால் அவரே முழுப் பாடலுக்கும் ஆடியிருக்கலாம். ஆனால், அன்று அவர் அந்த வாய்ப்பை எனக்கு அளித்தார். இத்தனைக்கும் அன்றைய நாளில் எனக்கும் அவருக்கும் அவ்வளவாக பழக்கமே கிடையாது. அஜித் சார் மூலமாகத் தான் நான் முதலில் திரையில் தோன்றினேன். மகா கணபதி பாடல் மட்டும் இல்லையென்றால், நான் இப்போது சினிமாவில் இருந்திருக்கவே மாட்டேன்” என லாரன்ஸ் கூறினார்.
தனக்கு கிடைத்த ஒற்றை வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். சினிமா தவிர்த்து சமூக அக்கறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ராகவா லாரன்ஸ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவி வருகிறார்.