
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு விதமான ஸ்டைலில் படம் எடுப்பார்கள். படத்தின் தலைப்பைக் கூட கதைக்குத் தகுந்தாற்போல் தேர்வு செய்வார்கள். ஆனால் படத்தின் தலைப்பை வித்தியாசமாக வைப்பதில் பெயர் போனவர் இயக்குநர் பேரரசு. இவரது படங்கள் அனைத்தும் ஊர்ப் பெயரைக் கொண்ட தலைப்பாகத்தான் இருக்கும். இதுதான் இவருடைய சிறப்பு. அதிரடி படங்களை இயக்கிய பேரரசு தல மற்றும் தளபதி ஆகிய இருவரையும் இயக்கியிருக்கிறார். பெரிய நடிகர்களை இயக்கும் போது யாராக இருந்தாலும், படம் நன்றாக வர வேண்டும் என்ற பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் பேரரசுவுக்கு ஏற்பட்ட பயமே வேறு. எதற்காக இவர் பயந்தார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகத் திகழும் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் இயக்கும் வாய்ப்பு பல பேருக்கு கிடைக்கவில்லை. இந்த வாய்ப்பு கிடைத்த சில இயக்குநர்கள் அதனை அருமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த வரிசையில் தல, தளபதியை அடுத்தடுத்து இயக்கியவர் பேரரசு.
தளபதி விஜய்யை வைத்து திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகிய 2 படங்களையும், தல அஜித்தை வைத்து திருப்பதி படத்தையும் இயக்கினார். இந்தப் படங்கள் வசூலில் பட்டையைக் கிளப்பியது மட்டுமின்றி, தல, தளபதியின் அதிரடி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தன.
கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பேரரசு இயக்கி விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தின் வசூலை இந்தப் படம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு பெரிய வெற்றியைக் கொடுத்ததால் மீண்டும் பேரரசு இயக்கிய சிவகாசி படத்திலும் நடித்தார் விஜய். இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றியை ஈட்டியது.
தளபதியை இயக்கி முடித்த கையோடு, தல அஜித்தை இயக்கச் சென்று விட்டார் பேரரசு. அடுத்த ஆண்டிலேயே அஜித் நடிக்க, திருப்பதி படத்தை இவர் எடுத்து முடித்தார். இந்தப் படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழ் சினிமாவில் விஜய் - அஜித் இருவருக்கும் தான் அதிக போட்டி இருக்கும். விஜய்யை வைத்து 2 படங்களை இயக்கும் போது, அஜித்தை தாக்கும் படியான வசனங்கள் ஏதும் வரக்கூடாது என பயந்துகொண்டே இயக்கினார் பேரரசு. அதேபோல் அஜித்தை இயக்கும் போது விஜய்யை தாக்கும்படியான வசனங்கள் இல்லாதவாறு பார்த்துக் கொண்டார் இயக்குநர் பேரரசு. ஏனெனில் ஒரு சிறிய வார்த்தை கூட ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி விடும்; அதோடு, அது படத்தின் வசூலையும் பாதித்து விடும் என்பதால், பயந்து கொண்டே தான் தல, தளபதியை இயக்கியிருக்கிறார் பேரரசு. சமீபத்தில் இந்தத் தகவலை அவரே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.