விமர்சனம்: பீனிக்ஸ் - நாம் மீண்டு வருவது கடினமே!
ரேட்டிங்(2 / 5)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் வந்திருக்கும் படம் பீனிக்ஸ். ஒரு எம்.எல்.ஏவை கொலை செய்து விடும் சூரியா சிறுவர் கூர் நோக்கு பள்ளியில் அடைக்கப்படுகிறார். அங்கே உள்ள மற்ற கைதிகளால் இவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதன் பின்னணியில் கொலை செய்ய பட்ட எம்.எல்.ஏவின் மனைவி இருப்பது தெரிய வருகிறது. இதற்கு காரணம் என்ன? ஏன் கொலை செய்தார் என்று படத்தில் விளக்கம் சொல்கிறார் ஹீரோ.
இந்த படத்தை சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கி உள்ளார். சண்டை மட்டும் நன்றாக வந்தால் போதும், கதை, திரைக்கதை தேவையில்லை என்று டைரக்டர் நினைத்து விட்டார் போல. படத்தின் பல காட்சிகள் பல படங்களில் பார்த்த அதே வட சென்னை, பாக்சிங், ஏமாற்றும் அரசியல் வாதி என படம் செல்கிறது.
கதை செல்லும் விதத்தில் ஏதேனும் புதுமை இருக்குமா என்று பார்த்தால் படம் தொடங்கி இருபது நிமிடங்களில் படத்தின் கிளைமாக்ஸ் வரை பின் சீட்டில் இருப்பவர்கள் தீர்க்கதரிசி போல சொல்லி விடுகிறார்கள். சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் இருப்பவர்களை பார்த்தால் சிறுவர்கள் போல் இல்லை. பெரிய இளைஞர்களை போல் இருக்கிறார்கள்.
படத்தில் ரசிக்கும்படியான இரண்டு விஷயங்கள்... ஒன்று படத்தின் ஒளிப்பதிவு, மற்றொன்று தேவதர்ஷினி மற்றும் வரலக்ஷ்மியின் நடிப்பு. சாம் C.S இசையில் அலறல் தான் அதிகம் இருக்கிறது. படத்தின் ஹீரோ சூரியா விஜய்சேதுபதி ஆக்சன் ட்ரெயினிங் மட்டும் எடுத்திருப்பார்; ஆக்ட்டிங் ட்ரெயினிங் எதுவும் எடுக்க வில்லை போல் தெரிகிறது. அடிதடியிலும் எமோஷனல் காட்சியிலும் ஒரே போல் எஸ்பரஷனில் 'விரைப்பாக' நிற்கிறார்.
சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பறவையை பீனிக்ஸ் என்பார்கள். இந்த பினிக்ஸ் பறவை பார்த்தால் நாம் 'மீண்டு' வருவது கடினமே.