விமர்சனம்: யுத்தகாண்டா அத்தியாயம் 2 - "பிரமாதமா இல்லனாலும் மோசமா இல்லப்பா!"

Yuddhakaanda Chapter 2 Movie
Yuddhakaanda Chapter 2 Movie
Published on

ஆறே வயதான ஒரு குழந்தைமீது பாலியல் அத்துமீறல் நடக்கிறது. அதைச் செய்பவன் எம் எல் ஏவின் தம்பி. இதற்காகக் நீதிமன்றத்துக்கு அலைகிறாள் அந்தக் குழந்தையின் அம்மா. ஒரு கட்டத்தில் நீதிமன்ற வளாகத்திலேயே அந்தக் கொடியவனைச் சுட்டுக் கொன்று விடுகிறாள். இந்தப் பெண்ணின் நிலையைப் பார்க்கிறார் நாயகன் ஹனுமந்த் ராவ் (கிருஷ்ணா அஜய் ராவ்). சட்டக் கல்லூரியில் படித்து விட்டு ஒரு நல்ல வழக்கிற்காகக் காத்திருக்கும் அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகத் தோன்றுகிறது. அந்தப் பெண்ணிற்காக வாதாட தானே களத்தில் இறங்குகிறார். நீதி கிடைத்ததா. அந்தப் பெண்ணிற்கு என்ன ஆனது என்பது தான் கதை.

நீதிமன்ற வழக்காடல்கள் போன்ற படங்களுக்கு எப்பொழுதும் ஒரு வரவேற்பு இருந்து வந்திருக்கிறது. அதிலும் வாதப் பிரதிவாதங்கள் நன்கு அமைந்து நல்ல நடிகர்களும் அமைந்து விட்டால் நிச்சயம் போரடிக்காமல் கதை நகர்ந்து விடும். இதுவும் அப்படியொரு படம் தான்.

நாயகனை எதிர்த்துப் பிரபல கிரிமினல் லாயராகப் பிரகாஷ் பெலாவடி. மிகவும் ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்யாமல் அனாயசமாக உடல்மொழியால் கவர்கிறார். இவரது பாத்திரம் இன்னும் சற்று அழுத்தமாக மூர்க்கமாக எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இவருக்கும் நாயகனுக்கும் இடையிலான போட்டி சில இடங்களில் நன்றாகவும் சில இடங்களில் சாதாரணமாகவும் அமைந்துவிடுகிறது.

அந்தப் பெண்ணின் அம்மா நிவேதிதாவாக அர்ச்சனா போதுமென்ற அளவு நடித்திருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட காட்சிகளில் பரவாயில்லையே என்று சொல்ல வைக்கிறார். நீதிபதியாக அமைதியான அதே சமயம் அழுத்தமான பாத்திரத்தில் டி எஸ் நாகாபரணா மிகவும் பொருத்தம்.

நாயகன் கிருஷ்ணா அஜய் ராவ் அழகாக இருக்கிறார். நன்றாக அழுத்தமாக வசனங்களைப் பேசுகிறார். ஆனால் முகத்தில் உணர்ச்சிகள் இன்னும் கொஞ்சம் வரலாம். சாதாரணக் காட்சிகளில் தப்பித்து விட்டாலும் உணர்ச்சிகரமான கிளைமாக்ஸ் காட்சிகளில் சற்றே நாடகத்தனமாக அமைந்து விட்டது. உண்மையில் கிளைமாக்ஸ் காட்சி இதில் கண்டிப்பாகச் வேறு விதமாக, அழுத்தமாக, உணர்வுப்பூர்வமாக அமைந்திருக்க வேண்டும். அதை விட்டு ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வழி என்று சப்பென்று ஆகிவிட்டது.

சைக்காட்டிக் பிரேக், மன அழுத்தம், நீதி மன்ற தாமதங்களால் குடும்பங்கள் படும் அவஸ்தைகள் எனப் பல கோணங்களில் அணுகினாலும் படம் முடியும்போது பரவால்லப்பா மோசமில்லை என்று சொல்ல வைத்ததில் இயக்குநர் பவன் பட்டுக்கு வெற்றி தான்.

ஊடகம் நினைப்பது போல நாங்கள் வழக்கை நடத்த முடியாது. வழக்கு என்பது நீதிமன்றத்தால் நடத்தப்படுவது. இதில் தீர்ப்பை மட்டும் எதிர்பாருங்கள். உங்கள் டி ஆர் பி யை அல்ல.

ஆழ்மனத்தின் நினைவுகள் எப்பொழுதும் நமக்குத் தெரியாமல் வெளியே வரும். அது ஏனென்றே யாராலும் சொல்ல முடியாது.

ஒரு குற்றத்தை அவர் செய்தார் என்று மட்டும் பார்ப்பதை விடுத்து அவர் அதை ஏன் செய்தார். எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவு எடுத்தார். அப்பொழுது அவர் என்ன மன நிலையில் இருந்தார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: கண்ணப்பா - 'ஒரு மணி நேரம் பீல் குட், இரண்டு மணி நேரம் வெறும் பில்ட அப் மட்டுமே'
Yuddhakaanda Chapter 2 Movie

"கொலை என்றாலே ஐபிசி 302 என்று சொல்லிவிட முடியாது. இந்த வழக்கைப் பொறுத்த வரை ஐபிசி 84 இல் தான் இதை அணுக வேண்டும்" என்று நாயகன் சொல்வதில் ஆரம்பிக்கிறது கதையின் திருப்பம்.

பாதிக்கப்பட்ட மனிதக் குலத்திற்கு உதவக் கடவுள் மனித வடிவில் எப்பொழுதும் வரக்கூடும். அந்த விதத்தில் இந்தப் பெண்ணும், நானும் ஏன் நீங்களும் கூடக் கடவுள் தான் யுவர் ஆனர்.

முழுக்க நீதி மன்றத்திலே நடந்தாலும் காட்சிகளும் கோணங்களும் சலிப்புத் தட்டாமல் கதை நகர்ந்த உதவுகின்றன. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்ன தேவையோ அவ்வளவு உதவியிருக்கின்றன. காதல் காட்சிகளோ, அபத்தமான காமெடிக் காட்சிகளோ இல்லாதது ஆறுதல்.

இதையும் படியுங்கள்:
அயர்ன்ஹார்ட் Review: ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா?
Yuddhakaanda Chapter 2 Movie

ஒரு நல்ல கருவை எடுத்துக் கொண்டு அதை விட்டு அதிகம் விலகாமல் அதற்கு உழைத்ததில் இந்த குழு டிஸ்டிங்க்ஷன் எடுக்காவிட்டாலும் நல்ல விதமாகப் பாஸாகிவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com