விமர்சனம்: போர்!
இன்னும் பலம் தேவை(2.5 / 5)
இரண்டு ஹீரோக்கள், மூன்று ஹீரோக்கள் இணைந்து பிற மொழிகளில் நடிக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் இது எப்போதாவது நடக்கும் விஷயம். தற்சமயம் வளரும் இளம் நடிகர்கள் காளிதாஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள, 'போர்' திரைப்படம் வெளியாகி உள்ளது. பிஜோ நம்பியார் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்தத் திரைப்படத்தில் உள்ள சில அம்சங்களைப் பார்ப்போம்.
பல 'கதை'கள்: இந்தப் படத்தில் ஒரு கதை இல்லை. பல கதைகள் உள்ளன. இந்தக் கதைகள் ஒரு கல்லூரியில் நடக்கின்றன. சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்பால் பழி வாங்கக் காத்திருக்கும் நாயகன், அரசியல்வாதியின் வாரிசு செய்யும் அராஜகங்கள், கல்லூரி தேர்தல், ஜாதியம், உரிமைக்குப் போராடும் பெண் என பல கதைகள். இத்தனைக் கதைகளில் போராட்டம் நடத்தும் பெண்ணின் கதை மட்டுமே மனதில் நிற்கிறது.
கதையை கோர்க்காத திரைக்கதை: சமூகத்தில் நடக்கும் பல்வேறு நிலைகளை இயக்குநர் சொல்ல வந்தாலும் திரைக்கதை என்ற நூலில் இந்தக் கதைகளை சரியாகக் கோர்க்கவில்லை என்றே சொல்லலாம். படத்தின் ஆரம்பத்தில் இரண்டு பெண்களின் வழியே திரைக்கதை நகர்கிறது. இப்படியே சென்றிருந்தால் பெண்களை மையப்படுத்திய சிறந்த படமாக இது அமைந்திருக்கும். மாறாக, ஒரு யுடர்ன் அடித்து ஹீரோக்கள் மீது திரைக்கதை செல்கிறது. இது படத்திற்கு சிறிது பின்னடைவுதான்.
துள்ளல் நடிப்பு: இரண்டு ஹீரோக்கள் படத்தில் இருந்தாலும், நடிப்பில் அதிகம் கவனம் பெறுவது பானு மற்றும் சஞ்சனா நடராஜன் என்ற இரண்டு பெண்கள்தான். போராட்டம், காதல், நட்பு என சமகால பெண்களை நடிப்பில் கொண்டு வருகிறார்கள். காளிதாஸ் ஜெயராம் கல்லூரி மாணவனாக துள்ளலாக நடித்துள்ளார். பல படங்களில் தனது 'மைக்' குரலுக்காகவே அறியப்பட்ட அர்ஜுன் தாஷின் குரல் இந்தப் படத்தில் ஒரு மைனஸாகவே அமைந்துவிட்டது என்று சொல்லலாம். தனது கட்டைக் குரலில் ரொமான்ஸ் செய்யும்போது காதலிக்கிறாரா அல்லது பயமுறுத்துகிறாரா என்றே நமக்குக் குழப்பம் ஏற்படுகிறது.
ஆஹா பின்னணி இசை: சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கெளரவ் கோஹித்தி என மூன்று இசையமைப்பாளர்கள் இருந்தாலும், வெங்கட் மற்றும் சச்சிதானந்த சங்கர நாராயணனின் பின்னணி இசைதான் ஆஹா சொல்ல வைக்கிறது. எமோஷனல், ஆக் ஷன் என பல இடங்களில் சிறப்பாக பேக் ரவுண்ட் ஸ்கோர் செய்கிறார்கள்.
சபாஷ் ஒளிப்பதிவு: இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஜிம்சி காலித் மற்றும் பிரிஸ்லி ஆஸ்கார் டிசோசாவின் ஒளிப்பதிவுதான். ஒரு அட்டகாசமான லைட்டிங் எபெக்ட்டை ஒளிப்பதிவில் தந்துள்ளார்கள். கிளைமாக்ஸ் காட்சியின் ஒளிப்பதிவில் 'வரேவா’ என சொல்ல வைக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்தப் படம்: ஒரு நல்ல கதையில் வலுவான திரைக்கதை என்ற களத்தை அமைத்திருந்தால் இந்த, 'போர்' மிகப்பெரிய வெற்றி வாகை சூடி இருக்கும்.