
தெலுங்கு திரையுலகில் பிரபலமான மூத்த நடிகரான ஃபிஷ் வெங்கட், முன்னனி நகைச்சுவை நடிகராக அனைவராலும் அறியப்படுகிறார். வெங்கட், மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தெலுங்கு திரையுலம் இவருக்கு ஃபிஷ் வெங்கட் என்ற அடைமொழியை கொடுத்தது. இவர் 2001-ம் ஆண்டு ‘குஷி’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஃபிஷ் வெங்கட் தனது தனித்துவமான தெலுங்கு வசன உச்சரிப்பு மற்றும் நகைச்சுவைக்காக பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் நடித்த கிங், ஹீரோ, ரெடி, சங்கம் போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதனை தொடர்ந்து மிகவும் பிஸியான காமெடி நடிகராக வலம் வந்த அவர் வருடத்திற்கு 4 முதல் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். கிட்டதட்ட 24 ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் இவர் அனைத்து முன்னனி நடிகர்கள் மற்றும் முன்னனி காமெடி நடிர்களுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில் 54 வயதாகும் நடிகர் ஃபிஷ் வெங்கட் தற்போது ஐ.சி.யூவில் உயிருக்குப் போராடி வருகிறார், அவருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவரது மகள் ஸ்ரவந்தி தெரிவித்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் ரூ.50 லட்சம் செலவாகும் என்பதால் அந்த தொகையை ஏற்பாடு செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் அப்போது, நடிகர் பிரபாஸின் குழுவினர் ஃபிஷ் வெங்கட்டின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு நிதி உதவி வழங்க முன்வந்ததாகவும் ஸ்ரவத்தி தெரிவித்தார். மேலும், மாற்று அறுவை சிகிச்சைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டதும் உதவி செய்வதாக அவர்கள் உறுதியளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரபாஸ் ரூ.50 லட்சம் தருவதாக உறுதியளித்தது ஒரளவு நிம்மதியைத் தந்தாலும், சிறுநீரக தானம் செய்பவரை கண்டுபிடிப்பது தான் பெரிய சவால் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குடும்பத்தில் உள்ள யாருடைய சிறுநீரகமும் தனது தந்தைக்கு பொருந்தவில்லை என்றும், தற்போது ஒரு நன்கொடையாளர் கிடைத்தால் உடனே அறுவை சிகிச்சையை தொடங்கி விடலாம் என்று கூறிய அவர், முன்னணி டோலிவுட் நட்சத்திரங்களான சிரஞ்சீவி, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது தந்தை அவர்களுடன் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியதை சுட்டிக்காட்டிய அவர், எனது தந்தைக்கு ஒரு நன்கொடையாளர் கிடைக்க உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.