

தமிழ் சினிமாவில் தற்போது இளம் கதாநாயகர்களில் முன்னணியில் இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். ஜென் Z தலைமுறைக்கு பிடித்தமான நடிகராக இருப்பதால், இவருக்கென்று இளைஞர்கள் மத்தியில் தனிக்கிரேஸ் உள்ளது. ரவி மோகன் கதாநாயகனாக நடித்த 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து 'லவ் டுடே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
கதாநாயகனாக நடித்த முதல் படமே பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. முதல் திரைப்படத்திலேயே 100 கோடி வசூலை எட்டியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அடுத்தடுத்து அவர் நடித்த 'டிராகன்' மற்றும் 'டியூட் ' ஆகிய திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தன. ஒரு அறிமுக கதாநாயகன் ஆரம்ப காலகட்டத்தில் 100 கோடி வசூலை தொடுவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறையாக இருந்தது.
புதிய தலைமுறையினருக்கு பிரதீப்பின் நடிப்பும் அவர் எடுத்துள்ள கதைக்களமும் வெகுவாக கவர்ந்திருப்பதால், அவரது திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளன. இதனால், கோலிவுட்டின் மினிமம் ₹100 கோடி வசூல் கேரன்டி நாயகர்களில் பிரதீப் ரங்கநாதனும் ஒருவராக மாறினார். இந்த பட்டியலில் மிகக் குறைவான நடிகர்களே இருந்து வருகின்றனர்.
பிரதீப்பின் வெற்றிப் பாதையில் ஒரு சிறு சறுக்கலாக , சமீபத்தில் வெளிவந்த அவரது எல்.ஐ.கே (LIK) திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படம் சராசரி வெற்றியை பெற்ற போதிலும் , பிரதீப் ரங்கநாதனின் தொடர் ₹100 கோடி வசூலை நெருங்க முடியவில்லை. இந்த திரைப்படம் சுமார் 70 கோடி ரூபாய் வரை மட்டுமே பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது. இது பிரதீப்பின் திரை உலக வாழ்க்கையில் சிறிய பின்னடைவாக கருதப்படுகிறது.
தற்போது பிரதீப் ரங்கநாதன் புதிதாக ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளார், என்பது கோலிவுட்டின் ஹாட் டாக்காக உள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் பாணியை பின்பற்றி இவரும் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் வெளியில் தெரியாமல் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் ஒரு புதிய படத்தின் பணிகளையும் தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது.
பிரதீப் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த திரைப்படத்தை பிரதீப்பின் முந்தைய திரைப்படமான டிராகன் திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக மமீதா பைஜூ நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாகவோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த வேடத்திலோ நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் , நடிகர் ஆகியவற்றை கடந்து தற்போது தயாரிப்பாளராகவும் பிரதீப் உருமாறி இருக்கிறார். அதே நேரம் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில், ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி நடிக்க பிரதீப் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.