கஜினி வில்லன் பிரதீப் ராவத் காலமானார்: திரையுலகில் சோகம்!

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் மிரட்டலான வில்லனாக கலக்கிய நடிகர் பிரதீப் ராவத் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்
Pradeep Rawat Passed
Pradeep RawatFacebook
Updated on

தெலுங்கு திரை உலகின் முன்னணி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற பிரதீப் ராவாத் , நேற்று உடல் நல குறைவு காரணமாக மறைந்தார். தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களை நடித்து வந்த அவர், நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

மத்திய பிரதேசத்தில் பிறந்த இவர், 1985 ஆம் ஆண்டு ஹிந்தி திரை உலகில் அறிமுகமானார். இவரது கம்பீரமான தோற்றத்தை கண்ட திரைப்பட இயக்குனர்கள் இவருக்கு பெரும்பாலும் காவல்துறை அதிகாரி , ராணுவ அதிகாரி , வில்லனின் அடியாள் போன்ற கதாபாத்திரங்களையே தொடர்ச்சியாக வழங்கி வந்தனர். குறிப்பாக 80- களின் பிற்பகுதியில் காவல்துறை அதிகாரி என்றாலே அது பிரதீப் ராவத் தான் என்ற நிலை பாலிவுட்டில் நீடித்தது. தொடர்ச்சியாக ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் துணை நடிகராகவே அவரது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

1990- களில் இந்தியாவில் தொலைக்காட்சி தொடர்கள் தொடங்க ஆரம்பித்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்தன. B.R. சோப்ரா தயாரித்து இயக்கிய மகாபாரத தொடர் , அப்போதைய காலக்கட்டத்தில் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பினை பெற்று இருந்தது. அந்த தொலைக் காட்சி தொடரை காணவே இந்தியாவில் தொலைக் காட்சிகள் விற்பனையாகத் தொடங்கியது .

அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த தொடரில் 'அஸ்வத்தாமன் ' கதாபாத்திரத்தில் பிரதீப் ராவத் நடித்து புகழ் பெற்றிருந்தார். அவர் நடித்திருந்த அந்த கதாபாத்திரம் அவருக்கு சினிமாவில் சற்று மேம்பட்ட வாய்ப்புகளையும் வழங்கியது. அதேபோல் அன்றைய காலகட்டத்தில் இன்னொரு மிகவும் புகழ்பெற்ற 'சந்திரகாந்தா' தொடரிலும் அவர் நடித்திருந்தார்.

நீண்ட காலம் பாலிவுட்டில் துணை நடிகராக நடித்து வந்தாலும் , ' லகான்' திரைப்படம் இவருக்கு அதிக பிரபலத்தை கொடுத்தது. அந்த திரைப்படத்தில் அவர் நடித்திருந்த தேவா சிங் சோதி கதாபாத்திரம் அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ஆயினும் ராஜமவுலி இயக்கத்தில் அவர் நடித்த 'சை ' என்னும் தெலுங்கு திரைப்படம் தான் அவருக்கு திரையுலகில் திருப்புமுனையை கொடுத்தது.

Ghajini villain actor
Pradeep Rawat passedMathruboomi

அதன் பின்னர் அவர் நடித்த 'கஜினி ' தமிழ் மொழி திரைப்படம், தேசிய அளவில் சிறந்த வில்லன் நடிகர் என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அதன் ஹிந்தி பதிப்பிலும் அவரே வில்லனாக நடிக்க, அவரது மிரட்டலான நடிப்பு மார்க்கெட்டிடின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. கஜினி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தெலுங்கு திரை உலகில் பிரதீப் ராவத்திற்கு நிரந்தரமான இடம் கிடைத்தது. தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது.

கடந்த 5 ஆண்டுகளாக இரத்தப் புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து மீண்டு வந்து தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனாலும் சமீப காலத்தில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் வந்தது. அதற்கான சிகிச்சைகளை அவர் தொடர்ச்சியாக மேற்கொண்டு இருந்தாலும், நோயின் கடுமையான தாக்கம் காரணமாக நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு தெலுங்கு மற்றும் பான் இந்தியா ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:
ராஜாஜி அரங்கம்: காலத்தை வென்ற தமிழ் சினிமாவின் அடையாளப் படிக்கட்டுகள்!
Pradeep Rawat Passed
logo
Kalki Online
kalkionline.com