நடிகை ப்ரீத்தி ஜிந்தா சமீபத்தில் நடந்த பஹால்காம் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கத்தக்கதாக உள்ளது.
தேசத்திற்காகத் தங்கள் இன்னுயிரை கொடுத்த ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், பாலிவுட் நடிகையும், பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் ரூ.1.10 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பஞ்சாப் அணி குழுவின் நிறுவன நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியுள்ளார். இந்த நிதியுதவி, இந்திய ராணுவத்தின் தென்மேற்குப் பிரிவின் கீழ் செயல்படும் ராணுவ துணைவியர் நல அமைப்புக்கு (Army Wives Welfare Association - AWWA) வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தால் தொடங்கப்பட்ட "ஆபரேஷன் சிந்தூர்" திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ப்ரீத்தி ஜிந்தா தனது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியில் இருந்து இந்தத் தொகையை வழங்கியுள்ளார்.
இந்த நிதியுதவி குறித்து பேசிய ப்ரீத்தி ஜிந்தா, "எங்கள் வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. ஆனால், அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்கவும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறவும் நம்மால் உதவ முடியும். ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுவது என்பது ஒரு பெரும் பொறுப்பு மட்டுமல்ல, பெருமையும் கூட. இந்தியாவின் ஆயுதப் படைகள் மீது எங்களுக்கு அதீத பெருமை உண்டு. நாட்டின் பாதுகாப்பிற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எங்கள் முழு ஆதரவையும் அளிக்கிறோம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த நிதி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளை மேம்படுத்துவதற்கும், அவர்களது குழந்தைகளின் கல்விக்கு உதவுவதற்கும் பயன்படுத்தப்படும். ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த மனிதநேயமிக்க செயல் நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், தேசத்தின் பாதுகாப்புக்காக தியாகம் செய்யும் வீரர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்ற உணர்வை இது ஏற்படுத்துகிறது.