
வைரஸ்கள் மனிதகுலத்தின் எதிரிகளில் ஒன்றாகும். பல மருத்துவ முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் தொடர்ந்து பரவிக்கொண்டேயிருக்கின்றன. தடுப்பூசிகள் கிடைத்தபோதிலும் இந்த வைரஸ்கள் தொடர்ந்து அழியாமல் இருக்கின்றன? அவற்றைக் கட்டுப்படுத்த முடியுமா? அல்லது முழுமையாக அழிக்க முடியுமா?
அழிக்க முடியாத வைரஸ்கள்:
இன்ஃப்ளூயன்ஸா (Influenza): இந்த வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருப்பதால் உலகளவில் இப்போதும் பரவுகிறது. அதுவும் குளிர் காலங்களில் மனிதர்களிடம் சுலபமாக பரவுகிறது.
ஹெப்படைடிஸ் பி (Hepatitis B): தடுப்பூசிகளால் இந்தத் தொற்று தடுக்கப்பட்டாலும் உலகளவில் இதனால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு இது ஒரு நாள்பட்ட தொற்றுநோயாக இருக்கிறது (Remain Chronically Infected) மற்றும் கடுமையான கல்லீரல் நோய்களுக்கும் வழிவகுக்கிறது.
மனித பாப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus) (HPV): இந்த வகை வைரஸ்கள் பல வகைகளில் இருக்கின்றன. இவற்றால் உண்டாகும் புற்றுநோய் தடுப்பூசிகளால் தடுக்கப்படுகிறது. இருப்பினும் பல HPV வகைகள் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாமல் பரவுகின்றன.
தட்டம்மை (Measles): தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாகவும் குறைந்த நோய்த்தடுப்பு விகிதங்களைக் (Lower Immunization Rates) கொண்ட சில பகுதிகளில் இந்த தொற்றுநோய்கள் இன்னும் இருக்கின்றன.
ரேபிஸ் (Rabies): விலங்குகள் மூலம் பரவும் இதை தடுப்பூசிகள் மூலம் தடுக்கலாம் தவிர, முற்றிலும் அழிக்கப்படவில்லை. காரணம் விலங்குகள் இருக்கும்வரை இந்த வைரஸும் காலம் முழுக்கத் தொடர்ந்துகொண்டிருக்கும்.
போலியோ (Polio): கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தடுப்பூசிகள் கிடைக்காத சில பகுதிகளில் அவ்வப்போது இன்னும் வெளிப்படுகிறது.
கோவிட்:19 (COVID:19): இதன் புதிய வகைகள் (New variants) தொடர்ந்து வெளிப்படுகின்றன. இதனால் நீண்டகாலம் இதனுடன் போராட வேண்டிய தருணத்தில் மனிதகுலம் இருக்கிறது.
நம்மால் ஏன் இதை முழுமையாக அகற்ற முடியவில்லை?
மனிதர்கள் இருக்கும் வரை: பெரியம்மை (Smallpox) மனிதர்களை மட்டுமே பாதித்ததால் அது ஒழிக்கப்பட்டது. ரேபிஸ், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பிற வைரஸ்கள் மனிதன் மற்றும் விலங்குகள் இருக்கும்வரை பரவும் ஆற்றல் கொண்டதாக இருக்கின்றன.
நிலையான தடுப்பூசி இல்லாதது: தடுப்பூசி விகிதங்கள் குறையும் இடங்களில் தட்டம்மை மற்றும் போலியோ போன்றவை பரவ தொடங்குகின்றன.
உருமாறும் விதம்: இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்:19 விரைவாக உருமாறக்கூடியவை. இதனால் இதற்கான நிலையான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருக்கிறது.
உலகளாவிய ஒத்துழைப்பு: பல நாடுகளில் நிகழும் அரசியல் மற்றும் சமூகத் தடைகளால் இதற்கான ஒழிப்பு முயற்சிகள் சில நேரங்களில் தடுக்கப்படுகின்றன.
முற்றிலுமாக ஒழிக்க முடியாதா?
உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரங்கள் (Universal Vaccination Campaigns): நோய்த்தடுப்பு திட்டங்களைப் பற்றி மொத்த உலக நாடுகளும் கூட்டாக சேர்ந்து வலுப்படுத்தினால் இதன் பரவல் வெகுவாக குறையலாம்.
மேம்பட்ட மரபணு ஆராய்ச்சி: ஒட்டுமொத்த உலகத்திற்கும் என பொதுவான காய்ச்சல் தடுப்பூசிகள் அல்லது புதுமையான வைரஸ் தடுப்பு சிகிச்சைகளை (Innovative Antiviral Therapies) உருவாக்குவது எதிர்கால பரவலைத் தடுக்கலாம்.
வலுவான பொது சுகாதாரக் கொள்கைகள்: மக்களிடம் தடுப்பூசி மீதுள்ள தயக்கம், ஊடகங்களில் தவறான தகவல்களைக் குறைப்பது உலகளாவிய நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
வைரஸ்கள் ஒருபோதும் முற்றிலுமாக மறைந்து போகாவிட்டாலும் அறிவியலும், மனித ஒத்துழைப்பும்தான் சமூகத்தில் அவற்றின் தாக்கத்தைக் குறைக்கின்றன. இதற்கான தீர்வு வரும்வரை அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் போராட வேண்டும்.