கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஜோஷுவா - இமை போல் காக்க'. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
ஜோஷுவா- இமை போல் காக்க திரைப்படத்தை ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். இவரின் சகோதரி மகன் வருண் கதாநாயகனாக நடிக்கு இத்திரைப்படம் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் கிருஷ்ணன் நடித்துள்ளார். நேற்று சென்னையில் நடந்த இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் வருண் பேசியதாவது, “இது ஒரு பயங்கரமான படம். இப்படத்தை உங்களிடம் கொண்டு வர 18 மாதங்கள் காத்திருந்தேன். ஒரு வழியா உங்கக்கிட்ட அந்த படம் வரப்போகுது. இன்னும் அவர் ஸ்டைலில் கூற வேண்டுமென்றால், நான் அவரிடம் கேட்டது ஜாலியான லவ் மூவி, ஆனால் அவர் எனக்கு கொடுத்தது ஒரு ஆக்ஷன் மூவி. இந்த படத்தின் மூலம் கடின உழைப்பும் காலமும் சேர வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்” என்று முடித்தார்.
அதேபோல் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், “இந்த படத்திற்காக நான் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு ஆக்ஷன் படம் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். வருணை ராஜா வீட்டுக் கன்னுகுட்டின்னு சொல்கிறார்கள். ஆனால் இவர் பெரிய அளவில் உழைத்திருக்கிறார். கேமரா முன்பு நின்று நடிப்பது மிகவும் கடினம். நான் படங்களில் நடிப்பதால் அதை உணர்ந்து சொல்கிறேன். இப்படத்தில் வருண் சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும் இது ஒரு விறுவிறுப்பான கதைக்களம் என்று கூறியது கிருஷ்ணாவும் நடிக்க ஒத்துக்கொண்டார். அதேபோல் டிடி கதாப்பாத்திரம் துருவ நட்சத்திரம் படத்தில் வருவதுபோல்தான் இப்படத்திலும் வரும். இரண்டு படங்களிலும் டிடி கதாப்பாத்திரத்திற்கு ஒரு தொடர்பு உள்ளது. அதனை படங்களைப் பார்த்ததும் நீங்கள் கண்டுப்பிடித்துவிடுவீர்கள்” என்றார்.
இறுதியாக தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில், “வருணை சாக்லேட் பாய் என்று கௌதம் சொல்வார். ஆனால் ஆக்ஷன் படத்தில் அவரை நடிக்க வைக்கிறேன் என்றார். நான் அவரிடம் வருணை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன் என்றேன். வருணை அனைவரும் ராஜா வீட்டு கன்னுக்குட்டினு சொல்கிறார்கள். ஆனால் அவர் இந்த இடத்திற்கு வர கடுமையாக உழைத்திருக்கிறார். இந்த படம் பார்க்கும்போது ஒரு இங்கிலிஷ் படம் பார்ப்பது போல்தான் இருக்கும். இளைஞர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும். ஹீரோவாக நடிக்கும் கிருஷ்ணன், கௌதம் கேட்டதற்காக இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்” என்று பேசினார்.