
சினிமா துறையை சேர்ந்த பலரின் வாழ்க்கை பக்கத்தை திருப்பி பார்த்தால் பல சோகங்களும், வலிகளும் நிறைந்ததாக இருக்கும். சிலர் டாக்டருக்கு படித்து விட்டு சினிமாவில் நடிக்க வருவார்கள், சிலர் மிகவும் கஷ்டப்பட்டு திரையுலகில் நுழைந்து பல தடைகளை தாண்டி தனக்கென ஒரு தனி இடத்தை பிடிப்பார்கள். அப்படி ஒருவர் தான் பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அக்சய் குமார். டெல்லியில் பிறந்த இவர், நடிகராவதற்கு முன்பு, பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றினார். பின்னர் மும்பைக்கு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஓட்டலில் சொர்ப்ப சம்பளத்திற்கு வேலை பார்த்த இவர், தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கி குவிக்கிறார். ஒரு படத்தில் நடிக்க இவர் ரூ.60 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
1991-ம் ஆண்டு வெளியான ‘சவுகந்த்’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் நுழைந்த அக்சய் குமாருக்கு 1992-ம் ஆண்டு வெளியான கிலாடி என்ற திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. அதனை தொடர்ந்த அவர் நடித்த அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுத்தந்ததுடன், பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாராக வலம்வரச் செய்தது.
பாலிவுட்டில் எப்பொழுதுமே பிசியாகவே வலம் வரும் நடிகர் அக்சய் குமார், தொடர்ந்து படங்களில் நடித்து வருவதுடன் ஏகப்பட்ட விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் வருமான வரி அதிகம் செலுத்தும் நடிகர்களில் அக்சய்குமார் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.
இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது 'பூத் பங்களா', பிரியதர்ஷன் இயக்கத்தில் 'ஹெவன்' ஆகிய படங்களில் அக்சய் குமார் நடித்து வருகிறார்.
2025-ம் ஆண்டு நிலவரப்படி, அக்சய் குமாரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2,500 கோடி (தோராயமாக $325 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இவரது படங்கள் தொடர்ச்சியான பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை சந்தித்த போதிலும், அவருக்கு கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கிரேசிங் கோட் பிக்சர்ஸ், கல்சா வாரியர்ஸ் என்ற கபடி அணியின் உரிமையாளர், விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு கார் சேகரிப்புகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவை இவருக்கு சொந்தமாக உள்ளது.
மேலும், SocialSwag இணைந்து இவரின் பிராண்ட் விளம்பரம் மூலம் மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூ.200–300 கோடிகளை ஈட்டுகிறார். படங்களில் நடித்து வரும் வருமானத்தை விட பல்வேறு முதலீடுகள் மூலம் மாதந்தோறும் இவர் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிறார். ஒரு நடிகராகவும், தொழிலதிபராகவும், கொடையாளராகவும் தனது பணிகளை சிறப்பாக நிர்வகித்து வருகிறார் நடிகர் அக்சய் குமார்.
பாங்காக்கில் ஒரு சமையல்காரராக இருந்து அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகர்களில் ஒருவராக அக்ஷய் குமார் உயர்ந்திருப்பது அவரது உறுதிப்பாடு, கடின உழைப்பு மற்றும் வணிக புத்திசாலித்தனத்திற்கு சான்றாகும்.