
பொன்மனச்செம்மல் பட்டத்தை எம்.ஜி.ஆருக்குத் தந்தது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். ஒருமுறை வாரியார் சுவாமிகளும் புரட்சித்தலைவரும் ஒரே மேடையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் புறப்படுவதற்காக புரட்சித்தலைவர் வாகனத்தில் ஏற முற்படும் சமயம் வாரியார் தன் வாகனத்திற்காக வெளியே நின்றிருந்தார். அவரிடம் சென்று புரட்சித் தலைவர் தன்காரிலேயே ஏறச் சொல்லி அவரது சிந்தாதிரிப்பேட்டை இல்லத்தில் கொண்டு விட்டு விட்டு பிறகு தன் இல்லத்திற்குச் சென்றார். இது நெகிழ்ச்சியான சம்பவம், வாரியார் சுவாமிகள் மீது புரட்சித் தலைவர் வைத்திருந்த மரியாதையின் வெளிப்பாடு.
நடிகை ஸ்ரீதேவிக்கு அளித்தப் பரிசு
ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக புரட்சித்தலைவருடன் நம் நாடு படத்தில் நடித்துள்ளார். சில ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர்.பிக்சர்சுக்காக ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் ஸ்ரீதர் கூற அவருக்கு 50,000 முன்பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் நின்றுவிட்டது. நடிகையும் முன் பணத்தை திருப்பித் தந்தார். இது நடந்து பல வருடங்கள் கழித்து ஸ்ரீதேவி புரட்சித்தலைவரைக் காண அவர் இல்லம் வந்திருந்தார்.
புரட்சித் தலைவர் பிரமுகர்களை சந்திக்கும் அறையில் 70 கிலோ எடையில் ஐந்தரை அடி உயரத்திற்கு ஒரு குத்துவிளக்கு இருக்கும். ஸ்ரீதேவி விடைபெறும் சமயம் அந்த விளக்கை தன் ஒரு கையால் தூக்கி ஸ்ரீதேவிக்குக் கொடுத்தார். தலைவர் வீட்டு விளக்கு தன் வீட்டை அலங்கரிக்க போகிறதே என்று நடிகைக்கு மகிழ்ச்சி. கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அது எவ்வளவு உயர்ந்த பொருளாக இருந்தாலும் கொடுத்து விடுவார் எம்.ஜி.ஆர்.. யோசனை என்பது அவரிடம் கிடையாது.
எம்.ஜி.ஆர் எளிமையான வாழ்க்கை
புரட்சித் தலைவரின் புகழ் இந்தியாவைத் தாண்டி கடல்கடந்து விரிந்தது. ஒருமுறை மலேசிய சுல்தான் புரட்சித்தலைவர் வீட்டை பார்க்க வந்தார். தலைவர் வீடு எளிமையாக இருந்தது பார்த்து ஆச்சர்யப்பட்டார். புரட்சித் தலைவர் வீடு ஆடம்பரமாக இருக்கும் என்று எண்ணி வந்தவர் அவர் வீடு, தோட்டம் எளிமையைக் கண்டு வியந்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வரான பின்பு கூட தன் வசதிகளை அதிகப்படுத்தவேயில்லை. தான் வசித்த இராமாவரத் தோட்டம், மாம்பலம் அலுவலகம் இரண்டிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒரே மாற்றம் சந்தன சில்க் ஜிப்பா அணிந்தவர் முதல்வரான பிறகு வெள்ளை ஜிப்பா அணியத் தொடங்கினார்.
எளிமையாகக் பிறந்து எளிமையாகவே வாழ்ந்து மறைநாத ஏற்றமிகு தலைவர்.