
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் என்ற வசனம் யாராலுமே மறக்க முடியாது. இதனால்தான் புஷ்பா என்ற கதாப்பாத்திரம் பிரபலமானது.
புஷ்பாவாக நடித்த ரேஷ்மா தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராகவும் செய்தி நிருபராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு வம்சம் தொடரின் மூலம் தமிழ் சீரியலில் அறிமுகமானார். பின் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
அதேபோல் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தின்மூலம் மிகவும் பிரபலமான ரேஷ்மா, இதற்கு முன்னரே ஒரு படத்தில் புகழ்பெற்றார். ஆனால், இவர்தான் அவரா என்று முதலில் பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
ஆம்! இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்தார். விஷ்ணு விஷால், சூரி, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான திரைப்படம் இது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவைக்கே பஞ்சம் இல்லாத வகையில் இயக்கியிருப்பார்கள்.
அப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களை திருப்தி செய்தது. விஷ்ணு விஷால், நிக்கி, ரோபோ சங்கர், சூரி, ரேஷ்மா என அனைத்து கதாபாத்திரங்களும் செதுக்கப்பட்டன.
அந்தவகையில் ரேஷ்மா ஒரு பேட்டியில் புஷ்பாவாக நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார். “முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மறுத்தேன். ஆனால், கவர்ச்சியாக எந்தவொரு காட்சியும் இல்லை என்று இயக்குநர் கூறினார். அதன்பிறகு தான், நடித்தேன். ஆனால், இந்த கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.
நிச்சயமாக படம் பெயர் தெரியவில்லை என்றாலும், பலரும் இந்த புஷ்பா மீம்ஸை ஷேர் செய்கிறார்கள். அந்தளவிற்கு படத்தைவிட அந்த கதாபாத்திரத்திற்கு வரவேற்பு அதிகமாகிவிட்டது. ஆகையால், இது ரேஷ்மாவிற்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை கொடுத்த படம் என்றே கூறலாம்.