Rail movie review
Rail movie review

விமர்சனம்: ரயில் - இது தமிழ் நாட்டுக்குத் தேவையான ரயில்!

ரேட்டிங்(3 / 5)

றைந்த எழுத்தாளர் ஞானி பத்தாண்டுகளுக்கு முன்பு, ‘தமிழ்நாட்டில் குடிப்பழக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. பிளம்பிங், கட்டட வேலை போன்ற உடல் சார்ந்த வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. தமிழ் நாட்டில் பல இளைஞர்கள் குடிப்பழக்கத்தால் வேலை செய்வதற்கான உடல் திறனை இழந்து வருகிறார்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். தற்சமயம் இந்த குடிப்பழக்கம் பல மடங்கு அதிகமாகி விட்டது. வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் அதிக அளவு உடல் சார்ந்த வேலைகள் செய்வதற்கு, தமிழர்களிடையே வளர்ந்து வரும் குடிப்பழக்கமும் ஒரு காரணம். இந்த குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாக வைத்து வந்துள்ளது எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள, ‘ரயில்’ திரைப்படம். வேடியப்பன் இந்தப் படத்ததை தயாரித்துள்ளார்.

நம்ம ஹீரோவுக்கு எப்போதும் குடி, குடிதான். மனைவி சொல்லி பார்த்தும் திருந்தவில்லை. வட இந்தியாவிலிருந்து வேலைக்கு வரும் ஒரு இளைஞன் ஹீரோ வீட்டு பக்கத்துல தங்கி இருக்காரு. இந்தப் பையனும், ஹீரோவின் மனைவியும் அக்கா - தம்பி போல் பழகுகிறார்கள். இருந்தாலும் எப்போதும் போதையில் இருக்கும் ஹீரோ, இவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார். எதிர்பாராத விதமாக வட இந்திய இளைஞன் விபத்து ஒன்றில் இறந்து போய் விட, அந்த வட மாநில இளைஞன் சேமித்து வைத்த பணம் காணாமல் போகிறது. இந்தப் பணத்தை நம்ம ஹீரோதான் திருடி இருப்பார் என்று எண்ணுகிறார் மனைவி. இந்தப் பணம் மீண்டும் கிடைத்ததா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

குடிப்பழக்கத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு, மன ரீதியான சிக்கல்களை சொல்லும் படமாக தந்திருகிறார் இயக்குநர் பாஸ்கர் சக்தி. மேலும், புலம் பெயரும் தொழிலாளர்களின் மன வலியையும் சொல்லி இருக்கிறார். படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிகவும் எமோஷனலாகவும், நாம் கனெக்ட் செய்துகொள்ளும் விதமாகவும் உள்ளது. "டைரக்டர் சார், எங்க பிடிச்சீங்க இந்த பொண்ணை" என்று கேட்க வேண்டும் போல் தோன்றும் அளவிற்கு பிரமாதமாக நடித்திருக்கிறார் வைரமாலா. படம் முழுவதும் நடிப்பில் ஆளுமை செலுத்துவது இவர்தான். குடிகார கணவனுடன் போராடும் நம்மூர் பெண்களை கண் முன்னே காட்டி விடுகிறார் வைரமாலா. ‘திருந்தாத புருஷனுக்கு சாபம் விடும் காட்சி அசத்தலாக நடிக்கும், இந்தப் பெண்ணை நம் தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே’ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஹீரோ குங்குமராஜா நம்மூர் குடிமகன்கள் செய்யும் அலப்பறைகளை கண்முன்னே காட்டி விடுகிறார். வடக்கனாக நடிப்பவர், ஹீரோயின் அப்பாவாக நடிப்பவர் என அனைவருமே சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
“கெட்டவனாக நடிக்கவே விரும்புகிறேன்…” – கல்கி பட நிகழ்ச்சியில் பேசிய கமல்!
Rail movie review

இங்கே பிழைக்க வரும் வட இந்தியர்கள் மீது நாம் வைத்திருக்கும் பொதுப் பார்வையை மாற்ற இந்த படம் முயற்சி செய்துள்ளது. ‘வடக்கன்’ என்ற பெயருக்கு சென்சார் இடம் தராததால், ‘ரயில்’ என்று படத்தின் பெயரை மாற்றம் செய்திருக்கிறார்கள். ரயில் என்பது புலம்பெயர் மனிதர்களின் அடையாளமாக இருப்பதால் இந்தத் தலைப்பை வைத்துள்ளதாக சொல்கிறது படக்குழு.

ஜனனியின் இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் கைகோர்த்து காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. தமிழ்நாட்டில் குடியைக் கொண்டாடும் மனோபாவம் வளர்ந்து வருகிறது. இந்த விமர்சனத்தை எழுதும் நேரத்தில் கூட கள்ளக்குறிச்சியில் பலர் கள்ள சாராயம் அருந்தி உயிரிழந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் இந்த ரயிலுக்கு தேவை இருப்பதாகவே தோன்றுகிறது.

logo
Kalki Online
kalkionline.com