உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'பாபநாசம்' திரைப்படம் குறித்து அதன் இயக்குனர் ஜீத்து ஜோசப் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கமல்ஹாசன் இல்லை என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 'த்ரிஷ்யம்' என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக்கே 'பாபநாசம்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், ஜீத்து ஜோசப் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "பாபநாசம் படத்தின் தமிழ் ரீமேக்கிற்காக முதலில் ரஜினிகாந்த் சாரைத்தான் அணுகினோம். அவரிடம் கதையை விளக்கினோம்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "ரஜினிகாந்த் சாருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், படத்தில் சில காட்சிகளில் காவல்துறை அவரைத் தாக்குவது போன்ற காட்சிகள் உள்ளன. அந்தக் காட்சிகள் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்காது என்று அவர் கருதினார். அதனால், 'இந்தக் கதைக்கு கமல்ஹாசன் சார் பொருத்தமாக இருப்பார். அவர் நடித்தால் நன்றாக இருக்கும்' என்று ரஜினிகாந்த் சாரே பரிந்துரைத்தார்.
அதன் பிறகுதான் நாங்கள் கமல்ஹாசன் சாரிடம் கதை சொல்லி, அவர் நடிக்க சம்மதித்தார்," என்று வெளிப்படையாகப் பேசினார்.
ஜீத்து ஜோசப்பின் இந்தத் தகவல், தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் இந்த வாய்ப்பை மறுத்திருந்தாலும், கமல்ஹாசனுக்கு வழிவிட்டு, 'பாபநாசம்' போன்ற ஒரு சிறந்த படம் உருவாக வழிவகுத்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.