
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே, கிஷோர், ஷோபின் ஷாஹிர் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் "சிக்கிடு" வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் இணையத்தில் வைரலான நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது. ரஜினிகாந்தின் வரவிருக்கும் கூலி படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், தமிழ் படங்களில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட படமாக கூலி மாறியுள்ளது. அதுமட்டுமின்றி அண்டை மாநிலங்களின் விநியோகிஸ்தர்களுக்கான உரிமமும் அதிக தொகைக்கு பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ ஆகிய இரண்டு படங்களும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெற்ற அற்புதமான பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் கவனித்த பிறகே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இரண்டு படங்களும் இந்தி வட்டாரத்தை விட தெலுங்கு மாநிலங்களில் அதிக வசூலை ஈட்டியது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானும் இணைந்துள்ளதால் இந்தி பட உரிமம் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.75 கோடிக்கு விற்கப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் ரூ.81 கோடிக்கு விற்பனையாகி தமிழ் படங்களில் அதிக தொகைக்கு விற்பனையான படம் என்ற சாதனையை பதிவு செய்துள்ளது. இதுவரை விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் தான் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் அதிக விலைக்கு விற்பனையாகி விஜய் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு முன்னர், விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' படத்தின் வெளிநாட்டு உரிமைகள் இந்த அளவிற்கு விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜனநாயகன்’ படம், விஜய் அரசியலில் கவனம் செலுத்துவதற்கு முன்பு அவர் திரையில் வெளியாகும் கடைசி படம் என்று கூறப்படுவதால், இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய்யின் 69-வது படமான ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.