
2017-ம் ஆண்டு மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அடுத்து இவரது இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் யார் இவர் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதனை தொடர் விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ மற்றும் கமல்ஹாசனை வைத்து விக்ரம் போன்ற படங்களில் முன்னனி கதாநாயகர்களுடன் பணியாற்றியதன் மூலம் முன்னனி இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கூட்டணி சேர்ந்து ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதுவரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றிப்படமாக அமைந்ததால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘Chikitu.. ’ என்ற முதல் பாடல் இன்று (ஜூன் 25) மாலையில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் இயக்குநர் டி.ராஜேந்திரன் பங்கு பெற்றிருப்பதை ‘TReat’ என படக்குழு மறைமுகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் பான் இந்தியாவாக வெளியாக உள்ள இந்த திரைப்படம் இந்தி தவிர மற்ற மொழிகளில் ‘கூலி’ என்ற பெயரிலேயே வெளியாக உள்ளது. ஆனால் இந்தியில் மட்டும் ‘கூலி’ திரைப்படம் ‘மஜதூர்’ (majdoor - தொழிலாளி) என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன் ‘கூலி’ என்ற படத்தில் ஏற்கெனவே நடித்துள்ளதாலும், ‘கூலி நம்பர் 1’ என்ற படத்தில், நடிகர் வருண் தவான்(2020) ஏற்கனவே நடித்துள்ளதாலும் பெயர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ‘Chikitu’ பாடலின் அறிவிப்பு வீடியோவில் இந்தி வெர்ஷனில் இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. மஜதூர் என்றாலும் ஹிந்தியில் கூலி என்றுதான் அர்த்தமாம்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் தவிர லோகேஷ் கனகராஜ் ‘பென்ஸ்’ திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் மாதவன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.