
70-கிட்ஸ் முதல் 2கே-கிட்ஸ் வரை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் இன்று இந்தியாவில் வெளியாகிறது. ஆனால் ஜெர்மனியில் ஒரு நாள் முன்னதாக நேற்று இரவே திரையரங்குகளில் வெளியாகி விட்டது. பிராங்க்ஃபர்ட் நகரில் உள்ள சினிபார்க் கார்பன்-ல் ஆன்லைன் மூலமாக ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டன. நான் புக் செய்த சமயத்தில் முன்வரிசை மட்டும் காலியாக இருந்தது. ஆனால் நேற்றிரவு கூட்டத்தை பார்த்ததும் மிரண்டு தான் போனேன்.
நேற்று பிராங்க்ஃபர்ட் காலநிலை நன்றாக இருந்ததால் (28 டிகிரி) ஜெர்கினுக்கு விடை கொடுத்து நம்ம ஊர் மாதிரியே டி-சார்ட்-ல் நிறைய பேரை பார்க்க முடிந்தது. 'ஏ' சர்டிபிகேட் திரைப்படம் என்பதால் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. எனவே 18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் மட்டுமே வந்திருந்தார்கள்.
எதையுமே சரியான நேரத்தில் செய்து பழக்கப்பட்ட ஜெர்மனியில் திரைப்படம் திரையிட தாமதமானது ஏன் என்று புரியவில்லை. ஏறத்தாழ முக்கால் மணி நேரம் கழித்து நள்ளிரவு 12:45-க்குத்தான் திரைப்படம் ஆரம்பமாகியது. படம் தொடங்க நேரம் ஆனதால் ஆங்காங்கே கூட்டமாக நின்று பேச ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் அனைத்தும் ரஜினியின் படங்களை பற்றியதாகவே இருந்தது. கமலும் ஆங்காங்கே வந்து சென்றார். ஆனாலும் கல்லூரி காலத்திய அதி தீவிர விசிறித்தனம் யாரிடமும் இல்லை. ஒருவேளை வந்திருந்தவர்களின் வயதும் அனுபவமும் கூட காரணமாக இருக்கலாம்.
ஏற்கனவே விஜய் படத்தின் போது சிறுவர்களும் குழந்தைகளும் உள்ளே இருந்ததால் தியேட்டர் நிர்வாகம் இடையில் படத்தை நிறுத்திய சம்பவத்தை கருத்தில் கொண்டு இந்த படத்திற்கு சிறுவர்களையும் குழந்தைகளையும் தவிர்த்திருந்தார்கள்.
பக்கத்து நகரமான ஃபுல்டாவிலிருந்து வந்திருந்த ஒருவரை சந்தித்தேன். "தலைவர் படம் - முதல் நாள் முதல் ஷோ பார்க்காமல் எப்படி!" என்று உற்சாகமாக சொன்னார். படம் முடிந்து மீண்டும் ஊருக்கு 100 கிலோமீட்டர் பயணம் செய்து காலையில் வேலைக்கும் செல்ல வேண்டுமாம் அவர். ரஜினி என்ற ஒற்றை பிம்பம் தான் இந்த முன்னெடுப்புக்கு காரணம்.
பிராங்க்ஃபர்ட்- ஐ பொறுத்தவரையில் இந்தத் திரைப்படத்தை Zineflix நிறுவன வெளியிடுகிறது. ஒரு டிக்கெட்டின் விலை 24 யூரோ. படம் ஆரம்பித்ததுமே சந்தோஷம் ஏற்படுத்திய ஆரவாரம், நள்ளிரவு தூக்கத்தை கலைத்து அனைவரையும் உற்சாக மூடுக்கு மாற்றியது.
ரஜினியின் நண்பராக சத்யராஜ். 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தில் அப்பாவாக நடித்தவர் இதில் நண்பராக மாறி இருக்கிறார். நண்பனை கொன்றவனை அடையாளம் கண்டு பழிவாங்கும் ரெகுலரான கதை. ஆனால் லோகேஷ் கனகராஜ் மற்றும் சந்ரு அன்பழகனின் திரைக்கதை படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. நாகர்ஜுனாவின் நடை உடை பாவனை அசத்தல்.
இடைவேளையை வடிவமைத்ததில் லோகேஷ் கனகராஜ் கலக்கி விட்டார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.