
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, அதன் ஆடியோ, சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் பெரும் தொகைக்கு விற்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 'கூலி' படமும் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. ரஜினியின் படம் என்பதாலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை மிகவும் சிறப்பாகச் செதுக்கியிருப்பதாலும், நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான் போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பதாலும், ப்ரீ-புக்கிங்கிலும் 'கூலி' சக்கை போடு போட்டு வருகிறது.
இந்தச் சூழலில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறனுக்கு ரஜினி தரப்பில் இருந்து ஒரு முக்கியக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில், 'கூலி' படத்திற்காக ரஜினி சம்பளம் எதுவும் பேசவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில், இதற்கு முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் ரஜினி நடித்திருந்தார். மேலும், 'ஜெயிலர் 2' படத்தையும் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார். 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றபோது, ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு கலாநிதி மாறன் விலையுயர்ந்த கார்களைப் பரிசாக வழங்கியிருந்தார். இந்த நம்பிக்கையின் அடிப்படையில், ஆரம்பத்தில் 'கூலி' படத்திற்கு ரஜினிக்கு ₹150 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.
ஆனால், தற்போது 'கூலி' படத்தின் ப்ரீ-பிசினஸ் ₹500 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாம். இதனால், படம் வெளியானால் கண்டிப்பாக ₹1000 கோடி வசூலை எட்டும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது. இதன் காரணமாக, ரஜினி தரப்பிலிருந்து மேலும் ₹50 கோடி சம்பளத்தை உயர்த்தி, மொத்தமாக ₹200 கோடி கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே அடியாக ₹50 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கப்பட்டதால், கலாநிதி மாறன் சற்று அதிர்ச்சியடைந்தாலும், கடந்த முறை 'ஜெயிலர்' வெற்றி பெற்றபோது காரைப் பரிசாக வழங்கியவர் என்பதால், 'கூலி' திரைப்படம் ₹1000 கோடி வசூல் செய்தால், ரஜினிக்கு மிகப்பெரிய பரிசு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஜினி கேட்ட சம்பளத்தையும் கொடுக்க அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ரஜினியின் மார்க்கெட் மதிப்பையும், 'கூலி' படத்தின் மீதான நம்பிக்கையையும் பறைசாற்றுகிறது.